கோவையில் இன்று மேலும் நால்வர் ” டிஸ்சார்ஜ் “. கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் 5 பேர் மட்டுமே — ஈ.எஸ்.ஐ.மருத்துவக்கல்லூரி டீன் நிர்மலா தகவல் !!!

கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதித்ததோடு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்திலும், சென்னையிலும் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே நோய்த்தொற்று 50,60 என இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1082 ஆக உயர்ந்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா நோய்த்தொற்றுதலால் அதிகம் பாதிக்கப்பட்டது கோவை தான்.இதுவரை 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,பி.எஸ்.ஜி மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்து வருகிறது.

 

இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து கோவை மெல்ல,மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.மேலும்,கோவை மக்களுக்கு ஓர் நற்செய்தியாக கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் 141 பேரில் நேற்று வரை 132 பேர் பூரண குணமடைந்து ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருபவர்களில் கோவை , திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த தலா இருவர் என நால்வர் இன்று பூரண குணமடைந்து ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ளது 5 பேர் மட்டுமே. இன்னும் ஓரிரு தினங்களில் இந்த 5 பேரும் கொரோனா சிகிச்சையில் இருந்து பூரண குணமடைந்து ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டால் கோவை கொரோனா இல்லா மாவட்டமாக மாறும்.

 

இதுகுறித்து கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறுகையில் ” கோவையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 141 பேர் அனுமதிப்பட்டனர்.அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த தீவிர சிகிச்சையின் காரணமாக நோயின் தாக்கம் குறைந்து,பூரண குணமடைந்து நேற்று வரை 132 பேர் ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டனர்.இன்றும் கோவை,திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த தலா இருவர் என நால்வர் பூரண குணமடைந்து ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்றால் தற்போது சிகிச்சை பெறுவோர் 5 பேர் மட்டுமே.அவர்களும் விரைவில் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார்கள் ” எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 141 பேரில் இன்று வரை 136 பேர் ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் கொரோனா இல்லா மாவட்டமாக கோவை மாறி வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.