CSR,FIR பதிவு ஆவணங்கள் கணினி வழி பதிவு செய்யும் வசதி – ஐ.ஜி.பெரியய்யா துவக்கி வைப்பு.

கோவை மாவட்டம் சூலூர் வட்ட காவல் நிலையத்திற்குட்பட்ட சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் CCTNS எனப்படும் கணினி வழி புகார் பதிவு செய்யும் வசதியினை மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா துவக்கிவைத்தார்.இதனால் வழக்கு குறித்த CSR,FIR பதிவு ஆவணங்கள் சுல்தான்பேட்டையிலேயே கிடைப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

கோவை மாவட்டம் சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை காவல் நிலையம் கடந்த 2018 ஆம் ஆண்டு சுல்தான்பேட்டை ஒன்றிய மக்களின் பாதுகாப்பிற்காக துவக்கப்பட்டது.அன்று முதல் சுல்தான்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள் நடைபெறும் குற்றச்சம்பவங்களுக்கான CSR மற்றும் FIR பதிவு ஆவணங்கள் சூலூர் காவல் நிலையத்தில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வந்தது.இதனால் CSR மற்றும் FIR பதிவு ஆவணங்களை பெற சுல்தான்பேட்டை மக்கள் சூலூர் காவல் நிலையத்திற்கு சென்று வந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று சுல்தான்பேட்டை காவல் நிலையத்திலேயே CSR மற்றும் FIR பதிவு ஆவணங்கள் கணினி மூலம் பதிவு செய்யும் வசதியை கோவை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை சரக டி ஐ ஜி கார்த்திகேயன்,கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் மற்றும் காவல் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

இன்று முதல் முதலாக பதிவு செய்த சிஎஸ்ஆர் ஆவணத்தை ஐஜி பெரியய்யா லட்சுமி என்ற பெண்ணிற்கு வழங்கினார். உடனடியாக அவ்வழக்கு குறித்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை வழங்கினார்.மேலும், இருவருக்கு CSR ஆவணங்கள் வழங்கப்பட்டன.இனிமேல் சுல்தான்பேட்டையிலிருந்து வழக்கின் ஆவணங்களை பெற சூலூருக்கு வரத்தேவையில்லை என்பதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.