கள்ளக்காதல் டூ கடவுள் அவதாரம்! திடீர் பெண் சாமியாரின் பகீர் பின்னணி ?

டந்த இரு தினங்களாக, சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளார், பெண் சாமியார் அன்னபூரணி அரசு . கடந்த கால கள்ளக்காதல் வாழ்க்கையில் இருந்து, இவர் திடீரென ஆதிபராசக்தி அவதாரம் எடுத்த பகீர் பின்னணியை பார்ப்போம்.

 

சமூக வலைதளங்களில் இரு தினங்களாக, டிரெண்டிங் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் பெயர், அன்னபூரணி அரசு . ஹோண்டா காரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் இந்த திடீர் சாமியார், பளபளக்கும் பட்டுப்புடவையில், லிப்டிஸ்க் சகிதம், மாலைகளை அணிந்து கொண்டு, சினிமாப்பட அம்மனை போலவே மேக்-அப் சகிதம் வலம் வருகிறார்.

 

இவரின் வருகைக்காகவே காந்த்திருக்கும் ஏராளமான பெண்கள், மண்டபத்திற்குள் அவரது ‘தரிசனம்’ கிடைத்தும், பக்தி பரவசம் பொங்கி, எங்கள் தாயே, அம்மா என்று முழக்கமிடுகின்றனர். அந்த பெண் சாமியாரும் அருள்பாலிக்கிறார்; ஆசி வழங்குகிறார். அழுது புரண்டு வரும் பெண்களுக்கு ஆறுதல் சொல்கிறார். பலாவை மொய்க்கும் ஈக்களை போல், அவரை சுற்றிலும் பக்தர்கள் மொய்க்கின்றனர். தீபாராதனை காட்டி காலில் விழுந்து வணங்கி, பிறப்பிப் பயன் கிடைத்ததாக, பூரித்துபோகின்றனர். அதன் பின்னர் தனது சொகுசு காரில், பெண் சாமியார் மீண்டும் புறப்பட்டு செல்கிறார்.

 

 

கடந்த 19ம் தேதி செங்கல்பட்டு அருகே நடைபெற்ற கூத்துகள் தான் இவை. இந்த காட்சிகள், இந்த புகைப்படங்கள், வீடியோக்கள், அந்த பெண் சாமியாரின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகின. இதை நெட்டிசன்கள் எடுத்து பகிர, ஒரே நாளில் பெண் சாமியார், சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகிவிட்டார். இதெல்லாம், வெறும் டிரைலர் தான்; இனிமேல் தான் மெயின் பிச்சர் என்பது போல், இன்னொரு அறிவிப்பும் பெண் சாமியார் தரப்பில் வெளியானது.

 

அதாவது, வரும் ஜனவரி 1ம் தேதி முதல், பொதுவெளியில் பக்தர்களுக்கு அன்னபூரணி அரசு அம்மா அருளாசி வழங்குவார்; இதற்கு கட்டணம் எதுவும் இல்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‛அகிலத்தை ஆளும் ஆதிபராசக்தியின் அவதாரமே’ என்று தலைப்பிட்டு அவர்களே அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். ‛அன்னபூரணி அரசுவின் திவ்ய தரிசனம்’ ஜனவரி 1, 2022 அன்று ‛தாயில் பாத கமலங்களில் தஞ்சமடைவோம்’ என்கிறார்கள் அந்த அறிவிப்பில். இலவச தரிசன அனுமதி வேறு. அந்த அறிவிப்பில், அவரது யூடியூப் பக்கத்தையும் அறிவித்துள்ளனர்.

 

 

இந்த திடீர் பெண் சாமியார் குறித்து புதுப்புது தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்ப, அவரே நினைத்துப் பார்க்காத மீடியா வெளிச்சமும், திடீர் மவுசும் அவருக்கு கிடைத்தது. அதே நேரம், இன்னொருபக்கம், இவர் யார் என்று சில நெட்டிசன்கள் துருவித் தேடிப்பார்த்து ஆரம்பித்தனர். இதில் கிடைத்த பல திடுக்கிடும் தகவல்களை, துருவி எடுத்து, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி பார்த்தால், இந்த பெண் சாமியாரின் இன்னொரு பக்கம் , அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.

 

இந்த பெண் சாமியார், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தங்களது குடும்பப் பிரச்சனைக்காக பஞ்சாயத்துக்கு போனவர் என்பதை, ஆதாரங்களுடன் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வெளியிட்டனர். அதாவது, 2012-ல் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியில், சோகமே உருவாக, அரசு என்பவருடன் ஜோடியாக அன்னப்பூரணி என்ற பெண் அமர்ந்துள்ளார். மேலும், அன்னப்பூரணி – அரசு ஜோடி தங்களுக்கு விவாகரத்து தந்துவிடும்படி அந்நிகழ்ச்சியில் கேட்கிறது.

 

அதாவது, கட்டிய கணவனை உதறிவிட்டு, அரசு என்பவருடன் சேர்த்து வைக்க, அன்னபூரணி கேட்டுள்ளார். சாட்ஷாத் அதே அன்னபூரணிதான் தற்போது அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில், ஆதிபராசக்தி அவதாரமாக தன்னை காட்டிக் கொண்டுள்ளார். இதைய்ம் போட்டு ‛என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…’ என்று, நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதனிடையே, இந்த விவகாரம் பூதாகரமாக, வில்லங்கம் வருவதற்குள் ஏதாவது செய்தாக வேண்டுமென்று, அம்மாவின் பக்தர்கள் மும்முரமாக உள்ளனர். மேலும், இந்த விவகாரம் குறித்து, இன்று ஒரு பதிவையும், அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் போட்டுள்ளனர். அதில், அதில், “மக்கள் அனைவருக்கும் வணக்கம், அம்மாவை பற்றி தவறான வதந்திகள் youtube news channel களில் பரப்பப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து விளக்கங்ளும் media மூலம் விரைவில் அம்மா உங்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்துவார். – Amma Devotee” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மறுபுறம், தனியார் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த சர்ச்சைக்குரிய பெண் சாமியார் அன்னபூரணி அரசு , “நான், இந்த பிரபஞ்சத்தில் பிறந்தவள். நான் எதற்கு ஓடி மறைய வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? நான் தவறு செய்தால்தானே ஓடி மறைய வேண்டும்”என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், “என்னை எது வழிநடத்துகிறதோ, அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் இங்குதானே இருக்கிறேன். காவல்துறைக்கு அழைப்பு விடுத்து என்னை பிடித்துக்கொடுங்கள்” என்றும் பேசி இருக்கிறார்.

 

அதுமட்டுமா, வதந்தி பரவுவதாக பொதுமக்களையும் அவர் ஒரு பிடி பிடித்தார். இதுபற்றி அவர் கூறும்போது, “தற்போதைய வதந்திகள் மூலம், பொதுமக்களின் மனதில் எவ்வளவு அழுக்கு உள்ளது என்பது தெரிகிறது. எனவே, பொதுமக்களுக்காக இனி நிகழ்ச்சி நடத்தமாட்டேன். என்னைத் தேடி வரும் குழந்தைகளுக்கு மட்டும் நிகழ்ச்சி நடத்தப்போகிறேன்” என்று பெண் சாமியார் அன்னபூரணி அரசு அம்மா தெரிவித்துள்ளார்.

 

சாமியார் நித்தியானந்தாவுக்கே சவால் விடும் பெண் சாமியார் அன்னபூரணி பற்றிய போலீசாரும் விசாரிக்க தொடங்கியுள்ளனர். கடந்த 19ம் தேதி செங்கல்பட்டு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா, விதிமீறல் உள்ளதா, யாரேனும் சாமியாருக்கு எதிராப புகார் தர தயாராக உள்ளனரா என்று போலீசார் கண்காணித்து வருகின்றனர். மொத்தத்தில், 2022 புத்தாண்டு, பெண் சாமியாருக்கு புதிராக இருக்குமா? புனிதமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.