எங்களது உயிரே போனாலும் நிலத்தை அளக்க விட மாட்டோம் – விவசாயிகள் உறுதி

கோவை அருகே உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க நில அளவீடு பணி செய்ய எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் விவசாயிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்கு மின்சாரம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.உயர் மின் கோபுரங்கள் மூலம் மின்சாரத்தை விளைநிலங்கள் வழியாக கொண்டு வந்து மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் கோவை ,திருப்பூர், ஈரோடு, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட 13 மாவட்ட விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.உயர் மின் கோபுரங்கள் விளை நிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள சந்திராபுரம் பகுதியில் காவல் துறை பாதுகாப்புடன் பவர் கீரிட் அதிகாரிகள் நில அளவீடு பணிகளை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நிலத்தை அளவீடு செய்ய வந்ததை கண்டித்து அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் நிலத்தை அளக்க விடாமல் தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.பவர் கீரிட் அதிகாரிகள் முன்னறிவிப்பு வழங்காமல் விவசாய நிலங்களுக்குள் அத்துமீறி நுழைந்து விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நில அளவீடு செய்து வருவதாகவும், மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறை தங்களை மிரட்டி அராஜகப்போக்குடன் நடந்து கொள்வதாகவும்,எங்களது உயிரே போனாலும் நிலத்தை அளக்க விட மாட்டோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும்,விவசாயிகளை பொருத்தவரை இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை எனவும் உயர்மின் கோபுரங்கள் அமைக்க ப்படுவதற்கு பதிலாக, புதை வழித்தடமாக மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்துஉள்ளனர்.நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.