அமெரிக்கா-ஈரான் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்வு..! பங்குச் சந்தையிலும் சரிவு!!

அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தையிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது.

 

ஈரான் இராணுவத் தளபதி கசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது இன்று அதிகாலை ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது . இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 80 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும், இன்னும் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து ஈரான் அதிபர் கொமெய்னி கூறுகையில், அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

 

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப்போ ஆல் இஸ் வெல் என்று டுவிட்டரில் பதிவிட்டு, நாட்டு மக்களிடம் நாளை முக்கிய உரை நிகழ்த்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பையும் டிரம்ப் ஏற்படுத்தியுள்ளார்.

 

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த இரு தினங்களில் மட்டும் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், இது மேலும் உயரும் என்பதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் உள்ளது.

 

அதே போல் இந்த போர்ப் பதற்றத்தால் இந்திய பங்குச் சந்தையிலும் இன்று கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 20 பைசா வரை சரிவடைந்துள்ளது.