வார்னரின் கிரேட் கம் பேக்… – கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு! #KKRvsSRH

கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது சன் ரைஸர்ஸ் அணி
ஐபிஎல் 2019 சீசனின் இரண்டாவது ஆட்டம் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைஸர்ஸ் இடையே நடைபெற்று வருகிறது. பால் டேம்பரிங் விவகாரத்தால் கடந்த சீசனில் விளையாடமல் இருந்த ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் இந்த முறை களமிறங்குவதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தால் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஏற்றார். டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் வார்னர், பேர்ஸ்டோ ஜோடி ஹைதராபாத்துக்கு துவக்கம் தந்தது. இந்த இணை கொல்கத்தா பந்துவீச்சை எளிதாக சமாளித்து ஆடியது. இருவரும் நாலாபுறமும் பந்துகளை பவுண்டரிகளாக விளாசினர். குறிப்பாக தடைக்கு பிறகு களம்புகுந்துள்ள வார்னர் சிறப்பாக ஆடினார்.
100 ரன்கள் பாட்னர்ஷிப்பை இந்த ஜோடி கடந்தது. அணியின் ஸ்கோர் 118 ரன்கள் எடுத்திருந்த போது, பேர்ஸ்டோவை கொல்கத்தா பௌலர் பியூஸ் சாவ்லா அவுட் ஆக்கினார். பின்னர் வந்த விஜய் சங்கர் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். இருப்பினம் அவர் வந்த சிறிது நேரத்திலேயே வார்னர் வெளியேறினார். தடைக்கு பிறகு விளையாடிய முதல் போட்டியிலேயே 85 ரன்கள் எடுத்தார் வார்னர். பின்னர் யூசுப் பதான் நிலைக்கவில்லை. இருப்பினும் தமிழக வீரர் விஜய் சங்கர் அணிக்கு கைகொடுத்தார். அதிரடியாக விளையாடி அவர் 40 ரன்கள் சேர்த்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களம் காண உள்ளது.