கொரோனா முன்னெச்சரிக்கை : திருமலையை தொடர்ந்து காரமடை அரங்கநாதர் கோவிலிலும் பக்தர்களுக்கு தடை!!

கொரோனா முன்னெச்சரிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோயில் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் காரமடை அரங்கநாதர் கோவிலிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தி வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் நடமாட்டமும் குறைந்து நாடு முழுவதும் வெறிச்சோடிய நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்ற அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து இன்று மாலை முதல் மலைப்பாதையும் தற்காலிகமாக மூடப்பட்டது.

 

இதற்கிடையே காரமடை அரங்கநாதர் திருக்கோவிலும் இன்று மாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆகம விதிப்படி தினசரி பூஜைகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.