கொரோனா துரித பரிசோதனை : 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் சென்னை வந்தடைந்தன!!

துரிதமாக கொரோனா பரிசோதனை நடத்தும் ரேபிட் டெஸ்ட் கிட்கள் சென்னை வந்தடைந்துள்ளன. இதோ அதோ என்று இழுபறியாக இருந்த நிலையில், தமிழகம் எதிர்பார்த்த 1 லட்சம் கிட்களுக்கு பதிலாக 24 ஆயிரம் கருவிகளை மட்டுமே முதல் தவணையாக மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், தற்போதுள்ள பிசிஆர் எனப்படும் கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை நடத்தி முடிவுகள் அறிவதில் காலதாமதமாகிறது. இதனால் கூடுதல் பரிசோதனை நடத்துவது சாத்தியமில்லாத நிலையில், 15 முதல் 30 நிமிடங்களுக்குள் விரைந்து சோதனை நடத்தும் ரேபிட் டெஸ்ட் கிட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய தமிழகம் முதலில் ஆர்டர் செய்திருந்தது.

 

ஆனால், இந்தக் கருவிகள் வந்து சேர்வதில் தாமதமாகி வந்தது. கடந்த 10-ந் தேதியே வர வேண்டிய இந்த கருவிகள் அமெரிக்காவுக்கு சப்ளை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி சர்ச்சையானது, இடையில் மத்திய அரசும், மாநிலங்கள் தனித்தனியே இறக்குமதி செய்யக் கூடாது எனவும், மொத்தமாக இறக்குமதி செய்து மாநிலங்களுக்கு பிரித்துத் தரப்போவதாக கூறியதாகவும் தகவல் வெளியானது.

 

இந்நிலையில், ஒரு வழியாக 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் நேற்று மாலை டெல்லி வந்து சேர்ந்தது. இதில் முதல் கட்டமாக 24 ஆயிரம் கிட்களை மட்டும் தமிழகத்திற்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவை இன்று சென்னை வந்து சேர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் அடுத்த ஓரிரு தினங்களில் கொரோனா பரிசோதனை துரிதப்படுத்தப்படும் என்று தெரிகிறது.