இராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பேரணி

இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் நீர் மேலாண் திட்டம் (ஜல் சக்தி அபியான்) தொடர்பான விழிப்புணர்வு
பேரணியை துவக்கி வைத்தார்.இந்திய அளவில் நீர் மேலாண்மையை மேம்படுத்தி நீர் வள ஆதாரங்களை பாதுகாத்திடும் நோக்கில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக ஜல் சக்தி அபியான் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நீர் மேலாண் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.மழைநீர் சேகரித்தல், நீர் நிலைகளை பாதுகாத்தல், பயன்பாடற்ற நீர் சேகரிப்பு அமைப்புகளை கண்டறிந்து புனரமைத்தல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், நீர் மேலாண்மைத் திட்டம் (ஜல் சக்தி அபியான்) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மரம் வளர்ப்பு அவசியம் குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக மாவட்ட ஆட்சியர் மரக்கன்று நட்டார். பள்ளி மாணவ, மாணவியர், பங்கேற்ற நீர் மேலாண்மை திட்ட விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கி வழிவிடு முருகன் கோயில் சாலை வழியாக இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

மழைநீரை சேகரித்தல், நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரித்தல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு விதமான விழிப்புணர்வு வாசக பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் த.கெட்சி லீமா அமலினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வீரப்பன், மண்டபம் மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பா.ராமமூர்த்தி, அ.பாண்டி உட்பட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவ,மாணவியர் பங்கேற்றனர்.