நாளை நடைபெறவுள்ள நடிகர் சங்க தேர்தல்: ஏற்பாடுகள் தயார்

நடிகர் சங்க தேர்தல் நாளை நடைபெறுவதை ஒட்டி டி நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் வாக்கு சீட்டுகள், வாக்கு பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நாளை, அதாவது 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான இடத்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பாதுகாப்பு தொடர்பாக சிக்கல் ஏற்பட்டபோது, தேர்தல் நடத்த கூடிய இடத்தை வேறு இடத்தில் நடத்துமாறு நீதிபதி கோரியிருந்தார்.

 

அந்த இடத்தை நேரில் சென்று பார்த்து தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபன் கூற வேண்டும் என சொல்லப்பட்டு இருந்தது.அந்த நிலையில் தான் நடிகர் சங்கங்களின் தேர்தலை ரத்து செய்வதாக கூறியிருந்தார்.இந்த நிலையில் விஷால் நீதிமன்றத்தில் அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கும் படி கோரியிருந்தார். அதற்கு தீர்ப்பு அளித்த நீதிமன்றம் நேற்று தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை. வாக்கு எண்ணிக்கையை மட்டும் நிறுத்தி வைக்குமாறு கூறியிருந்தார்கள்.

 

இந்த நிலையில், பாதுகாப்பு தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது தான் தேர்தல் எந்த இடத்தில் நடக்கிறது? அதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமா என்பது குறித்து விளக்கப்படும். தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில் தபால் ஓட்டுகள் இன்று வர தொடங்கி இருக்கின்றன. இதற்கான வாக்கு பெட்டி நடிகர் சங்க தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கிட்ட தட்ட 400 உறுப்பினர்களின் தபால் வாக்குகள் வந்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.

 

நாளை நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளும் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. நீதிபதியின் உத்தரவு கிடைத்த பின் இந்த பெட்டிகளை தேர்தல் நடத்தும் இடத்திற்கு கொண்டு செல்வார்கள். 3171 பேர் தான் வாக்கு அளிக்க தகுதி உடையவர்கள் என்றாலும், தேர்தல் முக்கியமாக கவனிக்கப்படும்.இந்த தேர்தல் நடப்பதில் பல அரசியல் இருக்கிறது என்றெல்லாம் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் நாசர் தலைமையிலான அணி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களை சந்திக்க உள்ளனர். இந்த முக்கிய சந்திப்பில் நாசருடன் கோவை சரளா மற்றும் லதா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.