மண்டபத்தில் 300 பேருடன் நடைபெற்ற திருமணம்! அனைவரையும் காவல் துறையினர் வெளியேற்றினர்!

கொரொனா வைரஸின் தாக்கம் திருமண விழாக்களிலும் எதிரொலிக்கிறது. பல திருமண விழாக்கள் விழிப்புணர்வோடு நடத்தப்பட்டாலும் பெரும் கூட்டத்தோடு சில திருமண விழாக்கள் நடந்துள்ளன. உற்றார், உறவினர் கூடி அறிந்தவர், தெரிந்தவர் வந்து கோலாகலமாக நடக்கவேண்டிய திருமண விழாக்கள், கொரொனா அச்சுறுத்தலால் கலையிழந்துள்ளன.

 

ஊரடங்கு உத்தரவால் கூட்டம் கூட கூடாது என்ற நடைமுறை உள்ளதால் திருமணம் விழாக்களும் மிக எளிமையாக நடந்து வருகின்றன. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அடுத்த சின்னவட கிராமத்தில் நடந்த திருமணத்தில் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மணமக்கள் தங்க ஆபரணங்கள் எதுவும் அணியாமல் முக கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதற்கு முரணாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு உத்தரவை மீறி தனியார் மண்டபத்தில் திருமண விழா நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதை அறிந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று அனைவரையும் வெளியேற்றினர்.

 

அரசு உத்தரவை மீறி செயல் பட்டவர்கள் மீது தேவைப்பட்டால் கிராம நிர்வாக அலுவலர் கொடுக்கும் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஆதிலட்சுமி புரம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்ற தொழிலதிபர் ஊரடங்கு உத்தரவு காரணமாக தனது திருமணத்தை கிராமத்து வீட்டில் எளிமையாக நடத்தினார்கள்.

 

நெருங்கிய சொந்தங்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இதில் பங்கேற்றனர்.