கொரானாவை எதிர்கொள்ள மார்ச் 22-ந் தேதி “மக்கள் ஊரடங்கு!!” காலை 7 முதல் இரவு 9 மணி வெளியில் வர வேண்டாம்..! பிரதமர் மோடி உரை!!

கொரானா பரவலை தடுக்கும் பரீட்சார்த்த முயற்சியாக வரும் 22-ந் தேதி, மக்கள் ஊரடங்கு அமல்படுத்தி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அழைப்பு விடுத்துள்ளார்.

 

பிரதமர் மோடி அழைப்பு உலகையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி பீதியில் உறையச் செய்துள்ளது கொரானா வைரஸ் தொற்று. சீனாவில் ஆரம்பித்து அங்கு கோர தாண்டவம் ஆடிய கொரானா, அந்நாட்டில் மட்டும் 3500 பேருக்கும் மேற்பட்ட மனித உயிர்களை பலிகொண்டது. இதனால் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் மேற்கொண்ட சீனா, இப்போது கொரானா பாதிப்பில் இருந்து மீண்டு விட்டது.

 

ஆனால், சீனாவுக்குத்தானே வைரஸ் பாதிப்பு, நம்மை எல்லாம் அண்டாது என உலக நாடுகள் முதலில் மெத்தனமாக வேடிக்கை பார்த்தன. இதன் விளைவு இன்று விபரீதமாகியுள்ளது.சீனாவில் இருந்து மெல்ல மற்ற நாடுகளுக்கும் காலடி எடுத்து வைத்த கொரானா இப்போது விஸ்வரூபமெடுத்துள்ளது. இதனால் உலகின் பெரும்பாலான நாடுகள் அலறித் துடிக்கின்றன.

 

கொரானா தாக்குதலுக்கு பலியாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், உலக நாடுகள் பலவும் இப்போது விழித்துக் கொண்டு கடுமையான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் அறிவித்து வருகின்றன. மனிதர்கள் மூலம் இந்த வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க, மக்களை வெளியில் நடமாட வேண்டாம் என்ற அளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

 

இந்தியாவையும் இந்த கொரானா வைரஸ் விட்டு வைக்கவில்லை. கடந்த 10 நாட்களில் இதன் தாக்கம் அதிகரித்து இதுவரை 180 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கையும் 4 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கின்றன.

இந்நிலையில் இந்த கொரானா தொடர்பாக பிரதமர் மோடி இன்றிரவு நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்தினார். அந்த உரையில், பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள்:

 

கொரானா வைரஸ் உலகை பேரழிவுக்கு கொண்டு சென்றுள்ளது. கொரானா உலக அளவில் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

 

இந்தியாவிலும் இது பெரும் விளைவுகளை ஏற்படுத்தாது என்று நினைக்க முடியாது.

 

இதற்கு அறிவியல் ரீதியில் இன்னும் தீர்வு காணும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. இன்னும் இதற்கு விடை காணவில்லை. மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.

 

உலகம் மிகப் பெரிய சவாலை சந்தித்து வருகிறது. உலகப்போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது.

 

கொரானை விட முக்கிய பிரச்சனை தற்போது எதுவும் இல்லை . ஒவ்வொரு இந்தியரும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரமிது.

 

வைரஸ் பரவலை இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. நாம் ஆரோக்கியமாக இருந்தால் உலகம் ஆரோக்கியமாக இருக்கும் .

 

வீட்டிலேயே இருப்பதன் மூலம் வைரஸ் பரவலை வெகுவாக தடுக்க முடியும். தற்போது நாட்டு மக்களிடம் நான் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

 

130 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியா இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலை மக்கள் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

 

மார்ச் 22 அன்று ஒரு நாள் மட்டும் மக்களே ஊரடங்க அமல்படுத்திக் கொள்ள வேண்டும். அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.மக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளவேண்டும்.

 

அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வர வேண்டும் .காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மக்கள் ஊரடங்கு அமலாவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

 

கொரானா அச்சத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம். அத்தியாவசிய பொருட்கள், மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் அதை தவிர்க்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.