இல்லத்தரசிகளுக்கு இனிய செய்தி..! ஒரேடியாக குறைந்த காஸ் விலை…!

சென்னை: தமிழகத்தில் மானியமில்லாத வீட்டு சமையல் காஸ் சிலிண்டரின் விலை ரூ.192 குறைந்தது.

 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம், அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

இந் நிலையில், கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 3வது மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் மானியமில்லா வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.761.50க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயு இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.569.50 ஆக குறைந்துள்ளது.

 

மானியமில்லாத வர்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1404க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.259.50 குறைந்து ரூ.1144.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஊடரங்கு காலத்தில் சமையல் சிலிண்டர் தேவை அதிகம் இருக்கும் நிலையில், கடந்த 3 மாதங்களாக எரிவாயு சிலிண்டர் விலை குறைந்து வருவது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.