மோடி அவர்களே நீங்கள் ஓடலாம். ஆனால், ஒளிய முடியாது – ராகுல் டுவீட்

பிரபல இந்தி செய்தி நிறுவனம் ஒன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல் பேட்டியை நேற்றிரவு ஒளிபரப்பியது. இந்த பேட்டியின்போது ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு நீங்கள் உதவி செய்ததாக வரும் தகவல்கள் தொடர்பாக… என்று நேர்காணல் செய்த பெண்மணி கேள்வி எழுப்பினார்.

அதற்குள் இடைமறித்த பிரதமர் மோடி, நீங்கள் சுப்ரீம் கோர்ட் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா, இல்லையா? என்று மறுகேள்வி கேட்டார்.

ரபேல் விவகாரத்தில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டும் ஏற்று கொண்டது. ஆனால், ரபேல் விவகாரம் தொடர்பாக சிலர் தொடர்ந்து கூறிவரும் பொய்களை ஊடகங்கள் செய்திகளாக வெளியிடுகின்றன

சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் சில தவறான தகவல்களையும் உங்கள் நிறுவனம் தலைப்பு செய்தியாக்கி விடுகிறது. ஆனால், வெளிச்சத்துகு வர வேண்டிய உண்மைகளை நீங்கள் இருட்டடிப்பு செய்து விடுகிறீர்கள் எனவும் மோடி வேதனையுடன் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இந்த பேட்டியின் ஒரு பகுதியை தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவின் அடிக்குறிப்பாக, ‘திரு.மோடி அவர்களே நீங்கள் ஓடலாம். ஆனால், ஒளிய முடியாது.  உங்களது ‘கர்மா’ (முன்வினைகள்) உங்களை காட்டிக்கொடுத்து விடும். அதை இந்த பேட்டியின்போது உங்களின் குரல் மூலம் இந்த நாட்டால் கேட்க முடிகிறது.
உண்மை என்பது மிகவும் வல்லமையான ஆயுதம். இந்த ஊழல் தொடர்பாக என்னுடன் விவாதம் செய்ய தயாரா? என சவால் விடுகிறேன்’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.