பொறியாளர் வீட்டில் 100 சவரன் தங்க நகை கொள்ளை..!

யிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காபுறநகர் பகுதியில் உள்ள பொறியாளர் வீட்டில் 100 சவரன் தங்க நகை மற்றும் 8 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சாந்தக்குமார் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

 

20 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டில் பணியில் உள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரி இரண்டு மகள்களுடன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுவிட்டு இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார்.

 

வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் மூன்று பீரோக்கள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 100 சவரன் தங்க நகை மற்றும் 8 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

 

தனது மூத்த மகள் திருமணத்திற்காக நகையை சேர்த்து வைத்து இருந்ததாகவும் தற்போது திருடு போனதாக கதறி அழுதார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.