மவுனம் கலைத்தார் ரங்கசாமி! பாஜகவுடன் இணைந்து என்.ஆர். காங்கிரஸ் போட்டி

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்துப் போட்டி என்பதில் சஸ்பெண்ஸ் வைத்து வந்த அக்கட்சித் தலைவர் ரங்கசாமி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளார்.

 

புதுச்சேரியில், நம்பிக்கை கோரும் தீர்மானத்தில், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் தோல்வி அடைந்தது. தேர்தலுக்கு குறுகிய நாட்களே இருந்ததால், பா.ஜ.க – அ.தி.மு.க – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியானது, அங்கு ஆட்சியமைக்க முயற்சிக்கவில்லை. இதனிடையே, சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக, என்.ஆர். ரங்கசாமிக்கும், புதுச்சேரி பாஜகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

 

இதையடுத்து, பாஜக மீது அதிருப்தியடைந்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பா.ஜ.கவை கழட்டிவிட்டுவிட்டு தனித்துப்போட்டியிடுவது என முடிவு செய்து அதற்கான வேலைகளை தொடங்கினார். புதுவையில் ஆதரவு அதிகம் கொண்டுள்ள ரங்கசாமியை வளைக்க, காங்கிரஸ் கட்சி, திமுக, மக்கள் நீதிமய்யம் உள்ளிட்டவை முயன்றன.

 

ஆனால், யாருக்கு ஆதரவு, யாருடன் கூட்டணி அமைத்துப் போட்டி என்பதை தெரிவிக்காமல், ரங்கசாமி மவுனம் காத்து வந்தார். இதனால், அவருக்கான மவுசு கூடியது. திமுகவும், காங்கிரஸும் ரங்கசாமியை தங்கள் பக்கம் இழுக்க முற்படுவதை அறிந்த புதுவை பாஜகவினர், ரங்கசாமியிடம் தொடர்ந்து பேசினாலும், பிடி கொடுக்காமல் இருந்து வந்தார்; இதையடுத்து, புதுவை நிலவரத்தை டெல்லி மேலிடத்திற்கு பாஜகவினர் தெரிவித்தனர்.

 

இதையடுத்து, பாஜக டெல்லி மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுவை வந்து என்.ஆர்.காங்கிரஸைத் தங்கள் அணியில் சேர்க்க பேச்சு நடத்தினார். அத்துடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ரங்கசாமியிடம் பேச்சு நடத்தினார். அதைத் தொடர்ந்து, ரங்கசாமி தனது நிர்வாகிகளுடன் என்.ஆர்.காங்கிரஸ் தலைமை அலுவலத்தில் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்தினார்.

 

இந்தக் கூட்டத்தில், ரங்கசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் பாஜக தலைவர் சாமிநாதன் ஆகியோர் அங்குள்ள தனியார் விடுதியில் ரங்கசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார், பாஜக கூட்டணியில் ரங்கசாமி தொடர்ந்து நீடிக்கிறார். வரும் தேர்தலில் எங்கள் கூட்டணி அபார வெற்றி பெறும். ஓரிரு நாளில் தொகுதிப்பங்கீடு அறிவிக்கப்படும் என்றார். புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் கூறுகையில், பாஜக அணியில் என்.ஆர் காங்கிரஸ் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

 

ரங்கசாமியின் மனமாற்றம் குறித்து என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், மத்தியில் உள்ள பாஜக ஆட்சியோடு இணக்கமாகச் சென்றால்தான் புதுச்சேரிக்கு நன்மை கிடைக்கும். அத்துடன் என்.ஆர்.காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளைத் தர பாஜக தயாராக உள்ளது. முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிப்பதாகவும் உறுதி தந்துள்ளனர். எனவே பாஜக கூட்டணியில் தொடர்கிறோம் என்றார்.