பள்ளி கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு : ரூ.10 லட்சம் அரசு நிவாரணம்

நெல்லையில் பள்ளியின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

 

நெல்லையில் இயங்கி வரும் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த துயர சம்பவத்தை அறிந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் மிகவும் வேதனை அடைந்ததாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் காயமுற்ற நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட முகஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.