அதிமுக கூட்டணியில் வழங்கப்படும் தொகுதிகளை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசிப்பதற்காக, தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் அவசரக்கூட்டம், சென்னையில் நாளை நடைபெறுகிறது.
அதிமுக கூட்டணியில் தொடர்வதாக தேமுதிக அறிவித்தாலும், இரு கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் இன்னமும் சிக்கல் நீடித்து வருகிறது. பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஒருகாலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள், அந்த கட்சிக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்று கூறி, அதிக இடங்களை கேட்டு வருகிறது.
அதிமுக தரப்பில், ஒரு ராஜ்ய சபா எம்.பி. சீட் மற்றும் 10 தொகுதிகள் என்ற நிலையில் பேச்சை தொடங்கினர். தேமுதிக தரப்பிலோ, 41 தொகுதிகள் என்ற நிலையில் இருந்து 28 தொகுதிகள் பின்னர் 25 தொகுதிகள் என்று தேமுதிக இறங்கி வந்த நிலையில் தற்போது 23 தொகுதிகள் ஒதுக்கும்படி கேட்டு வருகிறது. அதிமுக தரப்பில் தற்போது 15 இடங்கள் என்ற ஒதுக்க முன்வந்துள்ளது.
இரு கட்சிகளும் தங்கள் நிலையில் இருந்து இறங்கி வந்ததை அடுத்துப் பேச்சுவார்த்தை நேற்றிரவு மீண்டும் தொடர்ந்தது. நேற்று இரவு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் அரை மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.
அதன் பின்னர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இல்லத்திற்குச் சென்ற எல்.கே.சுதீஷ், அவரையும் சந்தித்துப் பேசினார். 10 நிமிடங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சுதீஷ் கிளம்பிச் சென்றார். இதில், அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் வரை தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. தேமுதிக தரப்பில் 18 கோரப்பட்டது. இதில் ஒன்றிரண்டு தொகுதிகள் கூடலாம், குறையலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே தேமுதிக வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து நாளை தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளது. இதில், ஓபிஎஸ்-இபிஎஸ் உடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்துப் பேசப்பட்டு, அதிமுகவுடன் தொகுதி உடன்பாட்டுக்கு வருவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் இழுபறியில் இருந்த தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுக்கு வந்துள்ள சூழலில், இன்றோ அல்லது நாளைக்குள் தேமுதிக – அதிமுக இடையே உடன்பாடு ஏற்படும் என்று தெரிகிறது.