திருப்பூரில் 20 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வரும் ருசியான சாப்பாடு..!

திருப்பூரில் சாம்பார், ரசம், மோர் மற்றும் இரண்டு வகை பொரியல் என அளவில்லா சாப்பாடு ஏழைக் கூலித் தொழிலாளர்களுக்கு 20 ரூபாய்க்கு வழங்கி வரும் உணவகத்திற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. திருப்பூரில் இருந்து அவினாசி செல்லும் சாலையில் அணைபுதூர் உள்ளது.

 

இங்கு குப்புசாமி என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டுவருகிறது. இவருக்கு சொந்தமான பின்னலாடை மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் ஏராளமான ஏழை தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். தொழிலாளர்களின் நிலையை உணர்ந்த குப்புசாமி அவர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் சேவையை தனது பெட்ரோல் பங்கில் ஒரு பகுதியில் துவக்கினார்.

 

உணவகத்தின் பல இடங்களிலும் இருந்து அந்த பகுதியை சுற்றியுள்ள மற்ற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளனர். இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் குறைந்த விலையில் நிறைவாக உண்ணும் வகையில் அளவில்லா சாப்பாடு சாம்பார், ரசம், மோர் இரண்டு வகை பொரியல் என அனைத்தையும் 20 ரூபாய்க்கு வழங்க ஆரம்பித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் வெளியூருக்கு பயணம் செய்பவர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், செக்யூரிட்டிகள் என அனைவரும் இங்கு வந்து உணர ஆரம்பித்துள்ளனர். தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் வந்து உணவு அருந்துபவர்கள் உண்டு.

 

இங்கு வழங்கப்படும் உணவு வகைகள் அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு மதியம் 12 மணியளவில் 20 ரூபாய்க்கு டோக்கன் வாங்கி ஏதும் இல்லை எனக் கூறாமல் அளவில்லாமல் சாப்பாடு அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

 

விலை குறைவாக சாப்பாடு வழங்கப்படுகின்ற காரணத்தால் பேருந்து மூலமாக வந்து உணவு அருந்துபவர்கள் உண்டு. நாளொன்றுக்கு 500 பேருக்கு மேல் உணவு வழங்கப்படுகிறது. மேலும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவும் வழங்கப்படுகிறது. சிக்கன் பிரியாணியும் குறைந்த விலையில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.