மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள்! திமுகவுடன் உடன்பாடு கையெழுத்தானது!

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம், இரு கட்சிகளுக்கு இடையே இன்று கையெழுத்தாகி உள்ளது.

 

சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், வரும் 12ம் தேதி தொடங்குகிறது; இது 19ல் நிறைவடைகிறது. தேர்தல் பிரசாரங்களுக்கு குறைந்த அவகாசமே உள்ளதால், அரசியல் கட்சிகள் பிரசாரப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன. எனினும் திமுக – அதிமுக அணியில் ஒருசில கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு இன்னமும் இழுபறியாகவே உள்ளது.

 

அதிமுக அணியில், தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இன்னமும் தொகுதிப் பங்கீடு முடியவில்லை. திமுக கூட்டணியை பொருத்தவரை மார்க்சிஸ்ட், கொமதேக, தமிழக வாழ்வுரிமைக்கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், நீண்ட இழுபறியாக நீடித்து வந்தது.

 

மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக முன் வந்தது. ஆனால், இதை ஏற்க மார்க்சிஸ்ட் மறுத்து வந்தது. அத்துடன், இதுகுறித்து விவாதிப்பதற்காக கட்சியின் செயற்குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து மாநில நிர்வாகக்குழு கூட்டமும் நாள் முழுவதும் நடத்தப்பட்டது.

 

இந்த கூட்டத்தில், சட்டப்பேரவை தேர்தல் பணிகள், கூட்டணிதொகுதி பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டன. அப்போது திமுக கூட்டணியில் தொடரவும், 8 தொகுதிகள் வரை கேட்டு பெற முடிவு செய்யப்பட்டது. இந்த சூழலில்தான் திமுக, மார்க்சிஸ்ட் இடையேயான தொகுதி பங்கீடு குறித்து 3-ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில், திமுக-மார்க்சிஸ்ட் தொகுதிப் பங்கீடு இன்று கையெழுத்தாகி இருக்கிறது. அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழகத்தில் பாஜக வளரக்கூடாது என்பதற்காக, இந்த எண்ணிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளோம். பாஜக – அதிமுக கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், இந்த முடிவை ஏற்றுக் கொண்டிருக்கிறது. தொகுதி எண்ணிக்கை மகிழ்ச்சி அளிக்கவில்லை; கூடுதலாக கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்போம்.

 

புதுச்சேரியில் பாஜக 3 நியமன உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைத்துவிட்டது. தமிழ்நாட்டிலும் நாளை இது நடக்கக்கூடும். எனவே, பாஜகவின் தளமாக தமிழகம் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக, இதையெல்லாம் சகித்துக் கொண்டோம் என்றார்.

 

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளும் தலா 6 இடங்களை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.