‘குற்றம் குற்றமே’ இதழ் செய்தி எதிரொலியாக, அவிநாசி தொகுதி அதிமுக வேட்பாளரான சபாநாயகர் தனபால் கட்சியினருடன் கலந்து ஆலோசனை நடத்தியதோடு அவர்களின் கருத்தை கேட்டறிந்தார். அவரிடம் ஏற்பட்டுள்ள இந்த மனமாற்றம், அதிமுகவினருக்கு உற்சாகத்தை தந்துள்ளது.
வரும் 6ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், அவிநாசி (தனி) தொகுதியில், அதிமுக சார்பில் மீண்டும் சபாநாயகர் ப.தனபால் களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து நேரடியாக திமுக போட்டியிடவில்லை. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆதிதமிழர் பேரவை கட்சியின் அதியமான் இங்கு களமிறங்கியுள்ளார்.
இதுதவிர, அமமுக கூட்டணியில், தேமுதிக மாவட்ட மகளிரணி செயலாளர் மீரா களமிறக்கப்பட்டுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் சார்பில் ஏ.வெங்கடேஸ்வரன், சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் சோபா உள்ளிட்டவர்களும் அவிநாசியில் போட்டியிடுகின்றனர்.
அவிநாசியில் அதிமுகவின் வெற்றி என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தநிலையில், நேரடியாக திமுக இறங்காமல் கூட்டணிக்கட்சிக்கு ஒதுக்கியது, அதிமுகவுக்கு சாதகமானது. ஆனால், சபாநாயகர் தனபாலோ, இதை தனக்கு வசதியாகக்கருதி, வெற்றி மிதப்பில் இருப்பதாக அதிமுகவினரோ குறைபட்டுக் கொண்டனர்.
இது பற்றி ‘குற்றம் குற்றமே’ வார இதழ் மற்றும் இணையதளத்தில் ”சந்தர்ப்பவாதத்தால் சபாநாயகருக்கு சரிவு? ஆணவத்தோடு ஆடுவதாக அதிமுகவினர் கடுப்பு… அவிநாசியில் தோல்வியை தடுப்பது யார் பொறுப்பு?” என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது.
அதில், தேர்தல் சீட் பெறும் வரை கனிவாக நடந்து கொண்ட சபாநாயகர், சீட் கிடைத்ததும் மீண்டும் பழைய தனபாலாக மாறினார். கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை; எடுத்தெறிந்து பேசுகிறார். கட்சியினர் ஆதரவு இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதை அவர் மறந்துவிட்டார். முன்னாள் எம்.எல்.ஏ. இன்னாள் கட்சி நிர்வாகிகள் என்று யாரையும் தனபால் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை என்று அதிமுகவினர் தெரிவித்த கருத்துக்களை பதிவு செய்தோம்.
.
சபாநாயகரின் இந்த போக்கு தொடருமானால், அதிமுகவினர் யாரும் அவருக்காக முழு மனதோடு தேர்தல் வேலை செய்வார்களா என்பது சந்தேகம்தான். தனபாலின் இந்த போக்கு, அதிமுகவுக்கு பெரும் சறுக்கலாக அமைந்துவிடும் என்பதையும் ‘குற்றம் குற்றமே’ இதழ் சுட்டிக்காட்டி இருந்தது.
நமது செய்தியின் எதிரொலியாக, சபாநாயகரிடம் உடனடியாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது அவிநாசி பகுதி அதிமுகவினரை குஷியடையச் செய்துள்ளது. இது குறித்து அதிமுகவினர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
“குற்றம் குற்றமே” வார இதழ் செய்தி வெளியானதை தொடர்ந்து, சபாநாயகர் தனபாலின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அன்னூரில் அதிமுக வேட்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பெயரை முழுமையாக வாசித்தார். வழக்கமாக அவர் அப்படி செய்யமாட்டார். வழக்கமான தனக்கு யார் சால்வை அணிவிக்கிறார்கள் என்றுதான் தனபால் பார்ப்பது வழக்கம்.
அன்னூர் கூட்டத்திலோ, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு சபாநாயகர் சால்வை போர்த்தி மரியாதை செய்தார். இக்கூட்டத்தில் தரப்பட்ட மனுக்களை படித்துப் பார்த்து தனது உதவியாளரிடம் கொடுத்தார். அதிமுக நிர்வாகிகளிடம் முகம் கொடுத்து பேசியதோடு, தற்போதைய நிலவரங்கள், பிரசார வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை கேட்டார்.
இப்படி அவர் நடந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், உற்சாகம் தருவதாகவும் இருந்தது. அவரிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், தேர்தல் முடியும் வரை மட்டும் இருந்துவிடாமல், எப்போதுமே தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எங்களிடம் இருந்த சோர்பு போய், புத்துணர்வு கிடைத்துள்ளது. இனி, சபாநாயகரின் வெற்றிக்காக முழுமூச்சோடு பாடுபடுவோம் என்றனர்.