குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1500.. ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம்! அதிமுக அதிரடி அறிவிப்பு!!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1500 உடன், குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று, எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் கூட்டணி தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னிர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

 

இதன் முடிவில் இரு தலைவர்களும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது கூறியதாவது: மகளிர் நலன் திட்டமாக, குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்றார். அதேபோல் சமூக பொருளாதார சமநிலையை ஏற்படுத்தும் நோக்கில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்.

 

மக்கள் மனம் மகிழும் வகையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும். கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நிறைய திட்டங்களை அதிமுக அரசு தந்துள்ளது. அதிமுக அறிவிக்கப்போகும் திட்டங்களை முன் கூட்டியே தெரிந்து கொண்டு, திமுக அறிவித்து வருகிறது என்று தெரிவித்தார்.