அவிநாசியில் பாஜக போட்டி? எல்.முருகன் களமிறங்க வாய்ப்பு!

திருப்பூர் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான அவிநாசியில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அரசியல் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு முடிந்து அடுத்ததாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அவ்வகையில், அதிமுக கூட்டணியில் 20 இடங்களை பெற்றுள்ள பாஜக, தனக்கு வேண்டிய தொகுதிகளின் பட்டியலை அதிமுக தலைமையிடம் வழங்கி இருக்கிறது.

 

ஆரம்பத்தில் 35 தொகுதிகள் வரை கேட்டு வந்த பாஜக, பின்னர் 25 தொகுதிகள் என்று இறங்கி வந்தது. கடைசியாக 20 தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்ளும் முன்பு, தான் கேட்கும் 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென்று அதிமுக தலைமையிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதிமுக தலைமையும் இதை ஏற்றுக் கொண்டதால், 20 தொகுதிகளை பாஜக ஏற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.

 

இந்த சூழலில், அதிமுக அணியில் பாஜக கேட்டுள்ள தொகுதிகளில் பெரும்பாலும் கொங்கு மண்டலத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவுக்கு கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கணிசமாக ஆதரவு உள்ளதால், கோவை தெற்கு, கிணத்துக்கடவு, திருப்பூர் அல்லது அவிநாசி உள்ளிட்டவற்றை கேட்டிருப்பதாக தெரிகிறது.

 

இதில்,சபாநாயகர் தனபால் போட்டியிட்டு வென்ற அவிநாசி தொகுதியை பாஜக கேட்டிருப்பதாக, ஒரு தகவல் கசிந்துள்ளது. குறிப்பாக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், இங்கு போட்டியிட்டாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன். முதலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் எல். முருகன் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அங்கு அமைச்சர் சரோஜா நிற்க விரும்புவதால், அந்த தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படுமா என்ற கேள்வி் எழுந்துள்ளது. இச்சூழலில் அவிநாசியில் எல்.முருகன் போட்டியிடுவார் என்ற தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.

 

அவிநாசி பாஜக ‘பூத் கமிட்டி’ பொறுப்பாளர்கள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மண்டல நிர்வாகிகள், அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் தயாராக இருக்கும்படி, மாநில பா.ஜ.க தலைமையகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், அவிநாசி தொகுதிக்கு எல். முருகன் வருகை தந்து ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

 

இது குறித்து, கோவை பாஜக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், பா.ஜ.க தலைவர் எல். முருகன், அவிநாசி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது எங்களது விருப்பம். இக்கோரிக்கையை வலியுறுத்தி, பாஜக ஊரக அணி சார்பில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவிநாசி தொகுதியில் அனைவரும் தயாராக இருக்கும்படி ஒரு தகவல் வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது என்றனர்.

 

காலம்காலமாக அவிநாசி தொகுதி அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. எனினும் கடந்தமுறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தனபால், சபாநாயகரானது, இந்த தொகுதிக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. ஆனாலும், தொகுதி பக்கம் அவர் தலைகாட்டாததால், அது அதிமுகவுக்கு பாதகமாக அமையுமோ என்ற கருத்து உள்ளது. இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அவிநாசியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.