அமேசான் நிறுவனத்திற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!

ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்துடன் இணைப்பதற்கான ஒப்பந்ததிற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று அமேசான் நிறுவனத்திற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்துடன் இணைப்பதற்காக 24 ஆயிரத்து 731 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது.

 

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக தங்களுடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தை ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனம் மீறிவிட்டதாக அமேசான் நிறுவனம் சிங்கப்பூரில் இருக்கும் நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஃப்யூச்சர் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திற்கு தடை விதித்துள்ளது.

 

சிங்கப்பூர் நடுவர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி அமேசான் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அதனை விசாரித்த தனி நீதிபதி அந்த உத்தரவை அமல்படுத்தஃப்யூச்சர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

 

அதை தொடர்ந்து சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இந்திய சட்டங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த முடியாது என்று உத்தரவிடக் கோரி ஃப்யூச்சர் நிறுவனம் மேல் முறையீடு செய்திருந்தது. அதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இந்த உத்தரவை எதிர்த்து அமேசான் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிங்கப்பூர் நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை இந்திய சட்டங்களின் கீழ் அமல்படுத்தலாம் என கூறினர். இதன் மூலம்ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைவதற்காக ஃப்யூச்சர் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.