வேட்பாளர் தேர்வில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே லடாய்? தனித்தனி ஆலோசனையால் பரபரப்பு!

அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி -. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் தனித்தனியே ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது, அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

அதிமுக கூட்டணியில் ஏறக்குறைய் தொகுதிப் பங்கீடு பணிகள் முடியும் கட்டத்தில் உள்ளது. இதையடுத்து, வேட்பாளர்கள் தேர்வில் அதிமுக தலைமை கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. ஆனால், இங்குதான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவிற்கு ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி என்று இரண்டு தலைமை உள்ள நிலையில், வேட்பாளர் தேர்வில் ஆளுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு என்ற அடிப்படையில்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று ஓ.பி.எஸ் வலியுறுத்தியதாக தெரிகிறது.

 

ஆனால், இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்க மறுத்துவிட்டாராம். அத்துடன், தனது ஆதரவாளர்களுக்காக ஓ.பி.எஸ். கேட்ட தொகுதிகளையும் வழங்க எடப்பாடி மறுத்ததாக கூறப்படுகிறது. இது, ஓ.பி.எஸ். தரப்பில் எரிச்சலை ஏற்படுத்தவே, நேற்றிரவு வெளியாக வேண்டிய 2ம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் கையெழுத்திட ஓ.பி.எஸ் மறுத்துவிட்டராம்.

 

இதையடுத்து, இன்று காலை தனது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவு அமைச்சர்களுடன் திடீரென ஆலோசனை நடத்தினார். அதிமுக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது, மற்றும் ஓ.பி.எஸ். தரும் குடைச்சல் குறித்து விவாதித்ததார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அதேபோல், அதிமுக அலுவலகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் இன்று காலை அவசர ஆலோசனை நடத்தினார். கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்ற மகளிர் தின விழாவில், முதல்வர் இபிஎஸ் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இரு தரப்பிலும் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

 

கட்சி, ஆட்சி இரண்டிலுமே எடப்பாடி தன்னை இதுவரை உதாசீனம் செய்து வந்ததாகவும், இனியும் அவரிடம் சரண்டர் ஆகி இருக்க முடியாது எனவும் ஓபிஎஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, வேட்பாளர் தேர்வில் 50:50 என்ற பார்முலாவை எக்காரணம் கொண்டும் விட்டுத்தர முடியாது என்றும் ஓ.பி.எஸ். சொல்லி விட்டாராம். ஓ.பி.எஸ். கையெழுத்திடாமல், எந்த வேட்பாளர் பட்டியலையும் வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த கருத்து வேறுபாடு காரணமாகத்தான் முதல்கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் அமைச்சர்கள் பலரது பெயர் இடம் பெறவில்லை என்றும், ஜெயக்குமார், சிவி சண்முகம் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

 

மொத்தத்தில், தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வேட்பாளர்கள் தேர்வில் இருவரிடையே எழுந்துள்ள மோதல், அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.  இருவரையும் சமாதானப்படுத்த அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோ முயன்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் பாஜக தலையிட்டு சமரசம் செய்யும் எனவும் தெரிகிறது. ஆதரவாளர்களுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இரு தலைவர்களும் விட்டுக் கொடுக்காமல் மோதல் போக்கை கடைபிடித்து வருவது, அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.