உதடுகளுக்கு ‘லிப் சர்வீஸ்” மட்டுமே செய்பவர் கமல்! வானதி கடும் தாக்கு
கமல்ஹாசன் இதுவரை லிப் சர்வீஸ் மட்டுமே செய்து வந்துள்ளார். உதட்டளவிலும், உதடுகளுக்கும் மட்டும்தான் அவர் சேவை செய்திருக்கிறார் என்று கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
வரும் 6ம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. தமிழக அளவில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளில் ஒன்றாக கோவை தெற்கு உள்ளது. இங்கு பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார், மக்கள் நீதிமய்யம் சார்பில் அதன் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
அண்மையில் கோவை தெற்கில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரசாரம் செய்திருந்தார். அப்போது பேசிய அவர், தொகுதி பிரச்சனை குறித்து வானதியுடன் கமல்ஹாசன் விவாதிக்க தயாரா என்று சவால் விடுத்திருந்தார்.
இதற்கு பதிலடியாக ம.நீ.ம. பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எங்கள் தலைவரை பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுடன் விவாதத்திற்கு அழைத்துள்ளார். விவாதம் செய்தால்தான் யாருக்கு நிர்வாக திறன் உள்ளது தெரியவரும் என்பது அவரது வாதம்.
அவரது சவாலை ஏற்றுக்கொள்கிறோம். முதலில் இந்தியாவை ஆளும் நரேந்திர மோடியுடன் எங்கள் தலைவர் விவாதம் செய்ய விரும்புகிறார். அதனை அடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் விவாதம் செய்ய விரும்புகிறார். அடுத்தடுத்து பாஜக அமைச்சரவையினர் ஒவ்வொருவருடனும் விவாதம் செய்து விட்டு கடைசியாக வானதி சீனிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் வைத்துக்கொள்ளலாம். ஸ்மிருதி இரானி பிரதமருடனான நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யட்டும் என்று கூறியிருந்தார்.
வானதி சீனிவாசனை துக்கடா அரசியல்வாதி என்று கமல்ஹாசன் தரப்பில் இழிவாக விமர்சனம் செய்தது பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கமலை கடுமையாக விமர்சனம் செய்த பாஜகவினர், அவரை துப்பட்டா அரசியல்வாதி என்றனர்.
இந்த நிலையில், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும் தன் பங்கிற்கு கமலை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து பிரசார கூட்டத்தில் பேசிய வானதி, நான் இதுவரை மக்களுக்காக மட்டுமே சேவை செய்து வருகிறேன். நேற்று கட்சி தொடங்கிய கமல், பிரதமருடன் விவாதம் செய்ய வேண்டுமா? உலகின் மிகப்பெரும் கட்சி பாரதிய ஜனதா.
என்னை துக்கடா அரசியல்வாதி என்று கமல் கட்சியினர் கூறுகின்றனர். கமல் இதுவரை மக்களுக்கு என்ன சேவை செய்துள்ளார்? அவர் இதுவரை லிப் சர்வீஸ் மட்டுமே செய்து வந்துள்ளார். உதட்டளவிலும், உதடுகளுக்கும் மட்டும்தான் கமலுக்கு சேவை செய்திருக்கிறார் என்று வானதி சீனிவாசன் கடுமையாக சாடியுள்ளார்.





