வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு : காரமடை அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை – கோவில் நிர்வாகம் !!!
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்று காரமடை அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோவில்.இக்கோவிலில். ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி,பகல்பத்து,இராப்பத்து உற்சவங்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். உற்சவங்களின் போது மூலவரான அரங்கநாதசுவாமி சொர்க்கவாசல் வழியாக வந்து பின்னர் நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்து பின்னர் கோவிலை வந்தடைவார்.
இந்த நிலையில் இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக முகக்கவசம் அணிந்து,போதிய சமூக இடைவெளியை கடைபிடித்து கோவில்களில் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள வைணவ திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

எனினும்,கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசி தினத்தன்று நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு காரமடை அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்து அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மன வேதனையடைந்துள்ளனர்.
மேலும்,இந்த ராப்பத்து,பகல்பத்து,வைகுண்ட ஏகாதசி உற்சவங்களின் போது காரமடை அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோவிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளிலும் எல்லா சாதியினரும் பந்தல் அமைத்து சுவாமி வீதிவுலா வரும் போது சிறப்பு பூஜைகளும்,அபிஷேக ஆராதனைகளும் செய்வதும் தொன்று தொட்டு நடைபெற்று வருவது வழக்கம்.நடப்பாண்டு பந்தல் அமைக்கவும் காரமடை பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






