கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் திடீர் சோதனை..! சென்னை வீட்டுக்கு சீல் வைத்த போலீசார்!!
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போது கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராகவும், அரவக்குறிச்சி எம்எல்ஏவாகவும் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2011-16ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. அமைச்சராக இருந்த போது போக்குவரத்துத் துறையில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், தினகரன் அணியில் சேர்ந்ததால் செந்தில் பாலாஜியின் எம்எல்ஏ பதவி பறிபோனது. தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் திமுகவில் சேர்ந்து அடுத்து வந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மீண்டும் எம்எல்ஏ ஆனார். திமுகவில் கரூர் மாவட்ட பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்த ஊழல், முறைகேடு குறித்தும், அதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்றும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று சென்னை, கரூர் ராமேஸ்வரப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியதுடன் விசாரணையும் நடைபெற்றது. செந்தில்பாலாஜியின் வீடு, அலுவலகம், அவரது சகோதரர் வீடு, பெற்றோர் வீடு உள்பட பல இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றறது.
சென்னையில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்ற போலீசார், வீடு பூட்டியிருந்ததால் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.இந்த சோதனை குறித்து செந்தில் பாலாஜி கூறுகையில், இது தமிழக அரசின் பழிவாங்கும் செயல் என குற்றம் சாட்டியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




