தொகுதி மறு வரையறை மசோதா – சசிகலா வரவேற்பு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் சசிகலா தனது சமூக வலைதள பக்கத்தில், “இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சரிசமமாக 50 சதவீதம் அளவிற்கு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இதன்படி தமிழகத்திற்கு 59 மக்களவைத் தொகுதிகள் கிடைப்பதை நாம் உறுதி செய்திட வேண்டும். இதன்மூலம் மக்களவை உறுப்பினர்கள் தங்களது தொகுதி மக்களை எளிதில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மேலும், மக்களவையில் மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை 815 ஆக அதிகரிக்கும் நிலையில், 33 சதவீத இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. இதன்மூலம் நாடாளுமன்றத்தில் மகளிரின் பிரதிநிதித்துவம் கணிசமாக அதிகரிப்பதுடன், பட்டியலின மற்றும் பழங்குடியின மகளிரின் பிரதிநிதித்துவமும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
எனவே, அனைத்து மாநிலங்களிலும் சரிசமமாக 50 சதவீதம் அளவிற்கு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி, வரும் 2051-ஆம் ஆண்டு வரை இத்தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படாது என்ற நடைமுறை, மாநிலங்களுக்கிடையிலான சமநிலையையும் நாடாளுமன்றத்தில் மகளிரின் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்வதற்கான முக்கிய அம்சமாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




