டெட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் திட்டம்..!
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வரும் முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்குச் சிறப்பு ‘டெட்’ தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் 1.09 லட்சம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பளிக்கும் வகையில், வரும் டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு சிறப்பு ‘டெட்’ தேர்வை நடத்தப் பள்ளிக் கல்வித்துறை தீர்மானித்துள்ளது.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், அனைத்து வகைப் பள்ளிகளிலும் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ‘டெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இச்சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தொடர்ந்து பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும் இத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், ஓய்வு பெற ஐந்தாண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதுடன், மற்ற அனைவரும் 2028 ஆகஸ்ட் 31-க்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் தேர்ச்சி பெற உதவும் நோக்கில், தமிழ்நாடு அரசு சிறப்புத் தேர்வை அறிவித்து குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்களையும் குறைத்தது. அதன்படி, பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகவும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான மதிப்பெண் 45 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும் குறைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையின்படி, கடந்த ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சிறப்பு ‘டெட்’ தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை மொத்தம் 2,17,519 ஆசிரியர்கள் எழுதிய நிலையில், 1,08,326 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்; 1.09 லட்சம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்-1 தேர்வில் தேர்ச்சி விகிதம் 80 சதவீதமாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 தேர்வில் தேர்ச்சி விகிதம் வெறும் 38 சதவீதமாகவும் பதிவானது.
கடந்த ஜூலை தேர்வில் தேர்ச்சி பெறாத லட்சக்கணக்கான ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வரும் டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வை எதிர்கொள்ளும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளி செயல்பாடுகள் பாதிக்காத வகையில் இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளை வரும் 31ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 13ம் தேதி வரை சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





