இன்று திருச்சி, மானாமதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்!
ஆயுத பூஜை பண்டிகைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், பயணிகளின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் – போத்தனூர் இடையே இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில் எண் 06023 சென்னை சென்ட்ரல் – போத்தனூர் சிறப்பு ரயில் அக்டோபர் 16-ஆம் தேதி அதாவது இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 09:15 மணிக்கு போத்தனூர் சென்றடையும். மறுமார்க்கத்தில், ரயில் எண் 06024 போத்தனூர் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் அக்டோபர் 17 சனிக்கிழமை மதியம் 02:00 மணிக்கு புறப்பட்டு அன்றிரவு 11:55 மணிக்கு சென்னையை வந்தடையும்.
இதே வழித்தடத்தில் மற்றொரு சேவையாக, ரயில் எண் 06033 அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை இரவு 11:55 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை போத்தனூர் செல்லும். மறுமார்க்கத்தில் ரயில் எண் 06034 அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை மாலை 06:15 மணிக்கு போத்தனூரிலிருந்து புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 03:35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
தென் மாவட்டப் பயணிகளுக்காக, தாம்பரம் – செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ரயில் எண் 06089 தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயில் அக்டோபர் 19 திங்கட்கிழமை இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12:15 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில் ரயில் எண் 06090 செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு ரயில் அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை மதியம் 03:00 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 03:20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மேலும், ஈரோடு – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06145) இன்று (அக்டோபர் 16) வெள்ளிக்கிழமை மாலை 04:00 மணிக்கு ஈரோட்டிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12:30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கத்தில் ரயில் எண் 06146 திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயிலாக அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை இரவு 11:40 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை காலை 10:30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது முன்பதிவில்லா ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கு இன்று மாலை 5.30 மணிக்கு 12 முன்பதிவில்லா பெட்டிகளுடன் கூடிய மெமு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கு நாளை இரவு 11.55 மணிக்கு மெமு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது.
மறுமார்க்கத்தில் மானாமதுரையில் இருந்து நாளை (அக்.17) காலை 10.45, அக். 20 பகல் 2.45 மணிக்கு தாம்பரத்திற்கு முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் புறப்படும் என்றும், சென்னை எழும்பூரில் இருந்து இன்றும், நாளையும் இரவு 7 மணிக்கு திருச்சிக்கு மெமு முன்பதிவில்லா சிறப்பு ரயில் என்றும் மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து சென்னைக்கு நாளை காலை 5.50 மணி, அக். 20 இரவு 10.45 மணிக்கு முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் புறப்படும் எனவும், சென்னை எழும்பூர் – திருச்சி சிறப்பு ரயில் பண்ருட்டி, சீர்காழி, கும்பகோணம், தஞ்சாவூர் வழியே இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




