ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!
தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை முதலமைச்சர் விஜய் இன்று மாலை நேரில் சந்திக்க உள்ளார். தமிழக அமைச்சரவை மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி வரும் நிலையில் ஆளுநர் உடனான சந்திப்பு கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்து வந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கேரளா ஆளுநராக இருந்து வந்த ஆர்.வி.அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களாக முழுநேர ஆளுநர் இல்லாமல் இருந்து வந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனிடையே தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகரை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து நேற்று (அக்டோபர் 14) இரவு சென்னை வந்த ஆளுநர் ஆர்.வி.அர்லேகருக்கு அமைச்சர் ஸ்ரீநாத், தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சென்னை ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநராக ஆர்.வி.ஆர்லேகர் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை முதலமைச்சர் விஜய், ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகரைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார். முதலமைச்சர் விஜய் வெளியிட்ட பதிவில், “தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! தமிழ்நாட்டின் வளர்ச்சி, மாநில உரிமைகள் மற்றும் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





