SIR மூலம் மு.க.ஸ்டாலின் டார்கெட் செய்யப்பட்டார்.. அவரிடமே எச்சரித்தேன் – திருமாவளவன்
எஸ்.ஐ.ஆரால் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரில் தோற்கடிக்கப்பட்டார் எனவும் பாஜகவின் கொள்கை எதிரிகளான கெஜ்ரிவால், மம்தா, பினராயி போன்றவர்களும் SIR-ஆல் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசினார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் ராஜ்மோகன், காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியதாவது:- இந்தியா கூட்டணி அணியில் சேர மாட்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள், பாஜகவிற்கு பயப்படுகிறார்கள், என்றெல்லாம் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் பரப்பப்பட்டவரும் சூழலில், இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், இடதுசாரிகளோடு கைகோர்க்கிறோம் என இந்தியா கூட்டணியின் ஒரு அங்கமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றி கழகம் பங்கேற்றுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும், நீக்கப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் பரிசீலனை செய்து வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகள் முன்வைத்து டெல்லியில் பத்து நாட்களாக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி பிரியங்கா காந்தியின் எந்த அளவிற்கு துணிச்சலோடு போராடிஜ் கொண்டிருக்கிறார்கள் என்பதை நேரில் கண்டு வியந்து போனேன்.
அரசியல் காரணங்களுக்கான போராட்டமாக இல்லாமல், ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என போராட்டம் நடக்கிறது. இவையெல்லாம் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும்; ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்; ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி வீதியில் படுத்து உருண்டு போராடி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்.
அவருக்கு உறறத்துணையாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் வீதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 13, 14, 15 என மூன்று நாட்கள் போராட்ட நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் டெல்லியில் நடந்த போராட்டம் காரணமாக 13, 14 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் நடத்தவில்லை. இன்று திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
ஞானேஷ் குமார் செய்த குற்ற செயல்களை அவருடன் பணியாற்றிய அதிகாரிகளால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், யாருக்காக இத்தகைய செயலில் அவர் ஈடுபட்டார்? என அரசியல் கட்சிகளை தாண்டி மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். எதிர்கட்சிகளை தாண்டி மாணவர் அமைப்புகள், வழக்கறிஞர் அமைப்புகள் போராடுகிறது.
பாஜகவின் முகத்திரை கிழிந்து விட்டது. அவர்களின் வெற்றி திட்டமிட்டு செய்த சதி. குறிப்பாக வட இந்திய மாநிலங்களை குறி வைத்து இந்த வேலையை செய்திருக்கிறார்கள். தென்னிந்திய மாநிலங்களில் அவர்களது கைவரிசையை காட்ட முடியவில்லை. இங்கு அவர்களுக்கு எந்த வேரும் இல்லை. அவர்கள் அப்படி செய்தால் பாஜக 10 இடங்களில் வெற்றி பெற்றது என்று காட்டினால் யாராலும் நம்ப முடியாது.
தமிழ்நாட்டில், கேரளாவில் அவர்களால் எதையும் அசைக்க முடியாது என்ற அளவிற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ஐ இந்த மாநில மக்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள்.
அரசியல் பகைவர்கள் அனைவரையும் சொல்லி வைத்தார் போல் காலி செய்து வருகிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், பிரனாய் விஜயன் தோற்கடிக்கப்பட்டுருக்கிறார். இவற்றை எல்லாம் பார்க்கும்போது அவர்கள் தோற்றவர்கள் என சொல்ல முடியாது, தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள், குறிவைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற கருத்தை நான் அப்போதே பதிவு செய்தேன். தங்களது கொள்கை எதிரிகளை வீழ்த்த எஸ்.ஐ.ஆரைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டது. இதை அவரது கவனத்திற்கு எடுத்து சென்றேன்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவிடம் நான் இதை சொன்னேன். ஒரு பெண்மணி என்னை தொடர்பு கொண்டு சதி நடக்கிறது. கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுவது கடினம் என தெரிவித்தார்.
முதலில் அலட்சியப்படுத்தினேன், தொடர்ந்து அவர் கூறும் போது, சேகர்பாபுவிடம் அந்த பெண்மணி அறிமுகப்படுத்தி பேச வைத்தேன். அந்தப் பெண்மணியே நேரில் அழைத்து பேசினார். மு.க.ஸ்டாலின் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடமும் இது தொடர்பாக தெரிவித்தேன். ஏன் தொகுதி மாறி நிற்க கூடாது? என கேட்டேன். அதெல்லாம் பிரச்சனை இல்லை, எஸ்.ஐ.ஆர் பணிகளை கவனமாக மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.
தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே இந்த எச்சரிக்கை நம் கவனத்திற்கு வந்தது, அதை குறிப்பிடுகிறேன். எந்த குற்றச்சாட்டையும் நான் சொல்லவில்லை. குற்றச்சாட்டும் நோக்கில் சொல்லவில்லை. எச்சரிக்கை படுத்துவதற்கு அப்போதைய முதலமைச்சரிடம் நேரடியாக தெரிவித்தேன். உங்களை குறி வைப்பதாக தகவல் வந்துள்ளது அதை நீங்கள் சரி பார்க்க வேண்டும் என தெரிவித்தேன்.
முழுமையாக ஆய்வு செய்து விட்டேன் எந்த பிரச்சினையும் இல்லை என சேகர் பாபு சொன்னார். ஆனால் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் இறந்து போனவர்கள் 20 ஆயிரம் பேர் எஞ்சியவர்கள் இடம் பெயர்ந்தவர்கள் என நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள், இரட்டை பதிவு என நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




