ராமர் கோவிலில் நடந்த காணிக்கை திருட்டு..!
அயோத்தி: உ த்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் நடந்த காணிக்கை திருட்டு, நாடு முழுதும் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ராமர் கோவில் விவகாரங்களை, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை கவனிக்கிறது. காணிக்கை திருட்டை அடுத்து, அறக்கட்டளை நிர்வாகிகள் இருவர் பதவி விலகிவிட்டனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் எப்படி ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுகிறாரோ, அதே போல அயோத்தி ராமர் கோவிலிலும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட வேண்டும் என, முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, இந்த தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன; 6,000 பேர் விண்ணப்பித்தனர். இதில், 16 பேர் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதிலிருந்து மூவர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் ஐ.ஏ.எஸ்., இன்னொருவர் ஐ.பி.எஸ்., மூன்றாமவர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. இந்த அறக்கட்டளையில், 15 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் விரைவில் கூடி, இந்த மூவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர் தான், ராமர் கோவிலின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுவார்.
இதில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிக்கே அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.இந்த காணிக்கை திருட்டு விவகாரம் குறித்து காங்., உட்பட எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் குரல் எழுப்பினாலும், அயோத்தியில் வாய் மூடி மவுனமாக உள்ளனர். காரணம், இந்த திருட்டில் பா.ஜ.,வுடன், சமாஜ்வாதி கட்சியும் சம்பந்தப்பட்டுள்ளது என, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டி வருகிறார். இன்னொரு பக்கம், அடுத்தாண்டு உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அயோத்தியில் இது குறித்து எந்த ஒரு கட்சியும் விவாதிக்க தயாராக இல்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




