தவெகவுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தை..!
பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் திமுக கூட்டணிக்குள் ராமதாஸ் வருவதற்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடம்பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 18 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பாமகவின் ராமதாஸ் தரப்பினர் திமுக கூட்டணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே திமுக கூட்டணியில் பாமக நிறுவுனர் ராமதாஸ் தரப்பு இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ராமதாஸ் கூட்டணியில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படட்டது. இதனால் திமுக கூட்டணியில் மருத்துவர் ராமதாஸ் தரப்பு சேர முடியாத நிலை உருவாகி உள்ளது. அதிமுக பாஜக கூட்டணியிலும் மருத்துவர் ராமதாஸ் தரப்பை சேர்க்க கூடாது என அன்புமணி தரப்பு நிபந்தனை விதித்து இருந்தார்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓரிரு நாளில் செங்கோட்டையன் மூலம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்து உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. வியாழக்கிழமை தோறும் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் ராமதாஸ் நாளை இது தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பாரக்கப்படுகிறது.






