ஆட்சி மாறினால் கனிமக் கொள்ளை மீது சி.பி.ஐ விசாரணை..!
திருநெல்வேலி மாவட்டம் இருக்கன்துறை கிராமத்தில் விதிகளை மீறி செயல்பட்டு வரும் 20-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கனிமங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுவதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு ‘காட்பாதரின்’ ஆசிர்வாதத்துடன் இந்த மெகா ஊழல் நடைபெறுவதாகவும், இது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஃபேபுக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் இருக்கன்துறை கிராமத்தில் ஒரே இடத்தில் 20 கருங்கல் குவாரிகள் விதிகளை மீறி செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாகவும் ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள காணொலி செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
தென் மாவட்டங்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த காட்பாதரின் துணையுடன் எல்லையில்லாமல் கனிமக்கொள்ளை நடைபெறுவதாக நான் தொடர்ந்து கூறி வரும் குற்றச்சாட்டை இச்செய்தி உறுதி செய்திருக்கிறது.
அந்தக் குவாரிகளுக்கான குத்தகைக் காலம் முடிவடைந்து விட்ட நிலையில், அவை தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், 25 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே கற்களை வெட்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில் 100 மீட்டர் ஆழத்திற்கும் மேலாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாகவும், அவை அனைத்தும் கேரளத்திற்கு கடத்திச் செல்லப்படுவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை. அதுமட்டுமின்றி, தென் மாவட்டங்களில் நடைபெறும் கனிமக்கொள்ளை தொடர்பாக நான் ஏற்கனவே கூறியிருந்த குற்றச்சாட்டுகளை இவை வலுப்படுத்துகின்றன. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்று வரும் கனிமக் கொள்ளைகளை நான் நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறேன்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியில் பா.ம.க. நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு விமானம் ஏறுவதற்காக திருவனந்தபுரம் நோக்கி மகிழுந்தில் நான் சென்று கொண்டிருந்த போது, எதிர்திசையில் சாரை சாரையாக பெரிய சரக்குந்துகள் வந்து கொண்டிருந்ததை பார்த்தேன்.
அவை எங்கு செல்கின்றன என்று விசாரித்த போது, தென் மாவட்டங்களில் உள்ள சட்டப்படியான கல் குவாரிகளிலிருந்து அளவுக்கு அதிகமாகவும், சட்டவிரோத கல் குவாரிகளில் இருந்து திருட்டுத்தனமாகவும் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, இந்த சரக்குந்துகள் மூலமாக கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப் படுவதாகவும், அவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட கனிம வளங்களை இறக்கி விட்டு, அடுத்த சுமையை ஏற்றுவதற்காக கல்குவாரிகளுக்கு அந்த சரக்குந்துகள் செல்வதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
கல்குவாரிகளில் இருந்து சரக்குந்துகளில் அதிக அளவாக 13 டன் அளவுக்கு மட்டும் தான் கற்கள் ஏற்றிச் செல்லப்பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு சரக்குந்திலும் 30 டன் அளவுக்கு கற்கள் கடத்திச் செல்லப் படுகின்றன. அதுமட்டுமின்றி ஒருமுறை வாங்கப்பட்ட அனுமதிச் சீட்டை பயன்படுத்தி ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட முறை கனிமங்கள் கேரளத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் முதன்மைக் கடமை ஆகும். ஆனால், ஆட்சியாளர்கள் இதைக் கண்டு கொள்வதில்லை என்பது மட்டுமின்றி, இந்தக் கொள்ளைக்கு முழுமையாக துணை போகின்றனர்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவர் தான் இந்தக் கொள்ளைகளுக்கு காட்பாதராக இருந்து வழிநடத்துகிறார் என்று ஏற்கனவே பலமுறை குற்றஞ்சாட்டியுள்ளேன். அந்தக் குற்றச்சாட்டை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். அவரை மீறி கனிமக் கொள்ளையர்களுக்கு எதிராக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது; அவ்வாறு நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பணியில் நீடிக்கவும் முடியாது. அந்த அளவுக்கு தி.மு.க அரசாங்கத்தில் காட்பாதரின் செல்வாக்கு கொடிகட்டி பறக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் கனிமக் கொள்ளைகள் குறித்து 2022-ஆம் ஆண்டு 54 குவாரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 53 குவாரிகளில் கனிமக் கொள்ளை நடந்தது தெரியவந்தது. அவற்றில் 24 குவாரிகளில் மட்டுமே கிட்டத்தட்ட 50 லட்சம் கன மீட்டருக்கும் மேலான சாதாரண கற்கள் மற்றும் கிட்டத்தட்ட 5.5 லட்சம் கன மீட்டருக்கும் மேலான கிராவல் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்பட்டதாகவும், அவற்றுக்கு ரூ262 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்தது.
ஆனால், காட்பாதரின் தலையீட்டைத் தொடர்ந்து ரூ.262 கோடி அபராதம் வெறும் ரூ.13.8 கோடியாக குறைக்கப்பட்டதுடன், அதை தவணை முறையில் செலுத்தவும் ஆணையிடப்பட்டது. இதிலிருந்தே காட்பாதரின் செல்வாக்கையும், கனிமக்கொள்ளைக்கு ஆட்சியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை துணைபோவதையும் புரிந்து கொள்ள முடியும்.






