இந்திய அளவில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது – முதல்வர் ஸ்டாலின்
இந்திய அளவில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 621 காவல் உதவி ஆய்வாளர்களும், 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது, பேசிய முதலமைச்சர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை கவனத்துடன் கையாள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். காவலர்களுக்கு வழங்கப்பட்டிருக்க அதிகாரத்தை மக்களுக்கு நல்லவிதமாக பயன்படுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு நண்பன் என்பதை, சொல்லாக பார்க்காமல் செயலில் காண்பிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும் புகார் கொடுக்கவரும் நபர்களிடம் அன்பாக பழகுங்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்த புகார் வரும் போது கவனமாக கையாளவேண்டும். இது இந்ததுறை என்னுடையது என்பதற்காக சொல்லவில்லை, இது என் உத்தரவு. எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு மழையின் போது காவல் பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரி ஒரு நபரை தோளில் சுமந்து அவரை காப்பாற்றினார். அவரை நான் வீட்டுக்கே அழைத்து பாராட்டினேன் என்று தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




