--- --:--:-- --

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி காரை மறித்து கேள்வி கேட்ட மக்கள்

5

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி காரை வழிமறித்து கேள்வி கேட்ட தொகுதி மக்களிடம் ‘நீ எனக்கா ஓட்டு போட்ட, யாருக்கு ஓட்டு போட்டியோ அங்கே போய் கேள்” என்று பொதுமக்களிடம் எம்.எல்.ஏ சீறிய சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்கு உட்பட்ட நரம்பை மீனவ கிராமத்தில் வியாழக்கிழமை 86 லட்சம் ரூபாய் செலவில் சாலை மேம்பாட்டு பணி நடைபெற்றது.

 

இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர் லஷ்மி நாராயணன் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி காந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சாலை மேம்பாட்டு பணிக்கான பூஜையை தொடங்கி வைத்தனர். பூஜையை முடித்துக் கொண்டு முதலமைச்சர் ரங்கசாமி காரில் புறப்படும் போது முதலமைச்சரின் காரை வழிமறித்த அந்த பகுதி மக்கள் தங்கள் கிராமத்திற்கு பேருந்து வரவில்லை என புகார் தெரிவித்தனர்.

 

மேலும், இன்னும் ஒரு வார காலத்தில் பேருந்து வரவில்லை என்றால் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்தனர். அப்போது அருகில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி காந்தன், “நீ எனக்கா ஓட்டு போட்ட, யாருக்கு ஓட்டு போட்டியோ அங்கே போய் கேள்” என்று ஆவேசமாக தொகுதி மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

இதைடுத்து முதலமைச்சரின் பாதுகாவலர் மற்றும் போலீசார் கேள்வி எழுப்பிய நபரை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி முன்பு சட்டமன்ற உறுப்பினருடன் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon