யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் கூறிய அறிவுரை!
யுபிஎஸ்சி குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ஏழை, எளிய மக்களின் வாழ்வை மேம்படுத்த பாடுபட வேண்டும் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பலருக்கும் ரோல் மாடலாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
2024 யுபிஎஸ்சி குடிமைப் பணி தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், 50 பேர் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து குடிமைப்பணிக்கு தேர்வானவர்களுக்கு, சென்னை அடையாறில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில், பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் எந்த மூலைக்கு சென்றாலும் சமூகநீதி, நேர்மை, துணிவு ஆகியவற்றை மனதில் வைத்து ஏழைகளின் உயர்வுக்காக பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார். உங்களின் சிந்தனையால் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டால், மக்கள் மனதில் ஒரு நிரந்தர இடம் கிடைக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கைகளை நோக்கி அதிகாரம் வர இருப்பதாகவும், அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.மேலும், மாணவர்களின் திறனை மேம்படுத்தவே நான் முதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டது; எந்த போட்டித் தேர்வுகளிலும் வெற்றிபெறவே நான் முதல்வன் திட்டம்.
மாணவர்கள் மீதும், திட்டம் மீதும் வைத்திருந்த நம்பிக்கை பலனளித்துள்ளது; கல்விதான் ஆயுதம், எந்த இடர் வந்தாலும் கல்வியை விட்டுவிடக்கூடாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




