--- --:--:-- --

டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு வசதி அறிமுகம்..!

3

தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி செல்லும் நடைமுறை உள்ளது. இந்தச் சிரமத்தைக் குறைக்கும் வகையில், வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் மதுபானங்களை முன்பதிவு செய்து, நேரடியாகக் கடைகளுக்குச் சென்று பெற்றுக்கொள்ளும் புதிய திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது.

 

 

இதற்காக Tasmace2e.in என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் எந்தெந்த மதுபான பிராண்டுகள் இருப்பில் உள்ளன என்பதை நுகர்வோர்கள் நேரடியாகத் தெரிந்துகொள்ள முடியும். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இயங்கும் இந்தத் தளத்தில், ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒருமுறை மதுபான இருப்பைப் பற்றிய தகவல்கள் உடனுக்குடன் புதுப்பிக்கப்படும்.

 

 

இந்தச் சேவையைப் பயன்படுத்த விரும்புபவர்கள் முதலில் இணையதளத்தில் தங்களது கணக்கை உருவாக்கி, 21 வயது பூர்த்தியடைந்துவிட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும். பின்னர், தங்களின் இருப்பிடத்திலிருந்து 5 கிலோமீட்டர் அல்லது 20 கிலோமீட்டர் எல்லைக்குள் உள்ள கடைகள், கடை எண் அல்லது மாவட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுத் தேவையான கடைகளைத் தேர்வு செய்யலாம். விருப்பமான மதுபானத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கான தொகையை இணையவழியிலேயே செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.

 

 

முன்பதிவு முடிந்ததும் ஒரு ‘க்யூஆர் கோட்’ உருவாக்கப்படும். இந்த குறியீட்டை 21 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் காண்பித்து, கூடுதல் கட்டணமின்றி அரசு நிர்ணயித்த எம்.ஆர்.பி விலையிலேயே மதுபானங்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஒருவர் சென்னையில் இருந்துகொண்டே திருநெல்வேலியில் உள்ள கடைக்குக்கூட இதன் மூலம் முன்பதிவு செய்ய முடியும். ஒருவேளை பதிவு செய்த மதுபானம் கிடைக்கவில்லை என்றால், செலுத்திய பணம் திரும்ப வழங்கப்படும் அல்லது வேறு கடையில் இருந்து பெற்றுக்கொள்ளும் வசதியும் இதில் வழங்கப்படுகிறது.

 

 

மேலும், மதுபானங்களின் சரியான விலை விவரங்கள் மற்றும் குறிப்பிட்ட டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் இடத்திற்கான வழித்தட வரைபடம் போன்ற கூடுதல் அம்சங்களும் இந்த இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே மேற்குவங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் மது விற்பனை மற்றும் டோர் டெலிவரி முறைகள் அமலில் உள்ள நிலையில், தமிழகத்திலும் தற்போது ஆன்லைன் முன்பதிவு முறை நடைமுறைக்கு வருகிறது. இருப்பினும், மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் சூழலில், இந்த ஆன்லைன் முன்பதிவு திட்டத்திற்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon