தமிழகத்தில் பாஜகவினர் 20-க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர்களாக வருவார்கள் – நயினார் நாகேந்திரன்
சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின், பாஜகவில் இருந்து 20-30 எம்.எல்.ஏக்கள் வருவார்கள், சிலர் அமைச்சர்களாகவும் ஆவார்கள்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். சசிகலா கட்சி தொடங்குவதால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் கிடையாது எனவும் அவருடன் யாரும் கூட்டணி குறித்து பேசவில்லை எனவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சென்னை அமைந்தகரையில் பாஜக சார்பாக சட்டமன்ற தேர்தல் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பாஜக கொடியை ஏற்றி வைத்து சட்டமன்ற தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக மேலிட இணைப்பு பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக முன்னாள் தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “தற்போது இருக்கும் ஆட்சி அகற்றப்பட வேண்டும். இது மக்களுக்கான ஆட்சி இல்லை; சட்டம் ஒழுங்கு சரி இல்லை; ஒரு டிஜிபியை கூட நியமிக்க முடியாத அளவிற்கு ஆட்சியாளர்கள் ஆட்சியை நடத்துகிறார்கள். திமுக அளித்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை. அவர்களைப் பொறுத்தவரை நோட்டை கொடுத்து ஓட்டை வாங்கி விடலாம் என இருக்கிறார்கள் என்றார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை டபுள் இஞ்சின் சர்க்கார் தான் சரியாக இருக்கும். அப்போதுதான் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிறைவேற்ற முடியும் என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசும்போது, “முதலமைச்சர் ஓய்வில்லாமல் தன்னுடைய மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் ஆட்சி நடத்துவதற்கான திறமை இல்லை. தமிழக மக்களிடம் பொய்யைக் கூறி ஓட்டை வாங்கி விடலாம் என்று அவர் நினைக்கிறார்” என குற்றம் சாட்டிய அவர், நிச்சயமாக எங்களுடைய ஆட்சி அமையும் அப்போது எல்லாம் சரி செய்யப்படும் என்றும் அவர் பதிலளித்தார்.
சசிகலா குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், “சசிகலாவால் எந்த விதமான பாதிப்பும் எங்களது கூட்டணியில் ஏற்படாது. அவருடன் எந்த பேச்சு வார்த்தையும் நாங்கள் ஈடுபடவில்லை” என்றார். தொகுதி பங்கீடுகள் குறித்து பிரதமர் வந்து சென்ற பிறகு பேசுவோம். எங்களுக்குள் எந்தவிதமான பிரச்சனையும் கிடையாது. நாங்கள் அதிமுகவிடம் எந்த விதமான டிமாண்ட் வைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




