வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் – கடம்பூர் ராஜு
மெர்சல் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது தவெக தலைவர் விஜய் தன் மூலமாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக கூறி அந்த புகைப்படத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது செல்போனில் காண்பித்தார்.
தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் வேண்டாம் என்றும் அவர் மீண்டும் நடிக்க வந்தால் அவரது படம் வெளிவர எந்த பிரச்னையும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தவெகவில் இருந்து விலகி 500க்கும் மேற்பட்டவர்கள் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய கடம்பூர் ராஜு, “மெர்சல் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை என்ற சான்றிதழ் அளிக்கப்பட்டால் மட்டுமே படம் வெளியாகும்.
அதற்காக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை சந்திக்க விஜய் வந்தார். தீபாவளி ரிலீஸ் என்பதால் வசூல் பாதிக்கும் எனக் கூறி 10 நிமிடம் 20 நிமிடம் அல்ல, 3 மணி நேரம் உட்கார்ந்திருந்து சந்தித்தார்.
சாத்தியமே இல்லாத நேரத்தில் அதுவும் ஞாயிற்றுக்கிழமை வந்து பிரச்சனையை கூறினார். விஜய் நேரில் வந்து கேட்கிறார் என்பதற்காக அவருக்கு உதவ வேண்டும் எனக் கூறியவர் எடப்பாடி பழனிசாமி.
அதற்காக உடனுக்குடன் டெல்லிக்கு பேசி அதிகாரிகளை நேரில் வரவழைத்து, மெர்சல் பட பிரச்சனைக்கு இரவோடு இரவாக அதிமுக ஆட்சிக்காலத்தில் தீர்வு காணப்பட்டது. இதனால், திட்டமிட்ட தேதியில் மெர்சல் ரிலீஸானது. விஜய் வந்ததை நாங்கள் குறைகூறவில்லை. அனைவருக்கும் பொதுவானவர்கள் நாங்கள்.
அவருக்கு உதவ வேண்டியது ஆட்சியில் இருந்த எங்களின் கடமை. ஆனால் அப்போது விஜய் சொன்ன வார்த்தைகள் மிக முக்கியம். மெர்சல் பட ரிலீஸுக்கு உதவியதற்காக வாழ்நாள் முழுக்க நன்றி கடனாக இருப்பேன் என விஜய் கூறினார். இப்போது விஜய் அதிமுக பெயரை உச்சரிக்கவே பயப்படுகிறார்.” என்று பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தார் கடம்பூர் ராஜு.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




