மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இஸ்ரோவின் தொழில்நுட்ப உதவியுடன் ஒரு லட்சம் படகுகளில் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களைப் பொருத்த ‘நப்மித்ரா’ (NABHMITRA) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “கடற்கரையிலிருந்து 12 கடல் மைல் வரையிலான கடல் மீன்வள மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறை அந்தந்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.
லட்சத்தீவு மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த 3 ஆண்டுகளில் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவா அரசும் அத்தகைய பாதிப்புகள் எதையும் தெரிவிக்கவில்லை. கேரளா அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, 2022-ம் ஆண்டு ஏப்ரல், மே, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏற்பட்ட கடுமையான குறைந்தழுத்த சூறாவளி காரணமாக மொத்தம் 1,66,756 மீனவர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், 2025 மே 18 முதல் 31 வரை நிலவிய மோசமான வானிலை எச்சரிக்கையால் 1,72,160 மீனவர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச அரசு, 2023-ல் ‘மிக்ஜாம்’ புயலால் 1091 மீனவர்களும், 2025-ல் ‘மோந்தா’ புயலால் 978 மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு, 2022-23-ல் ‘மாண்டஸ்’ புயலால் 1183 மீனவர்களும், 2023-24-ல் ‘மிக்ஜாம்’ புயலால் 20,342 மீனவர்களும், 2024-25-ல் ‘பெங்கல்’ புயலால் 1519 மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மத்திய மீன்வளத் துறை, பிரதான் மந்திரி மத்சய சம்பதா யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ், 13 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 1 லட்சம் விசைப்படகுகள் மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட படகுகளில் தலா ரூ.364 கோடி செலவில் தகவல் தொடர்பு சாதனங்களை (Transponders) பொருத்த அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டம் இஸ்ரோ (ISRO) தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை 46,000 சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆண்ட்ராய்டு கைபேசி மூலம் 200 கடல் மைல் தொலைவு வரை இருவழித் தகவல் தொடர்பு வசதி. புயல் மற்றும் பேரிடர் குறித்த நிகழ்நேர வானிலை எச்சரிக்கைகள்.சர்வதேச கடல் எல்லை தாண்டாமல் இருக்க எச்சரிக்கை வசதி.’நப்மித்ரா’ (NABHMITRA) செயலி மூலம் மீன்கள் அதிகம் கிடைக்கும் பகுதிகள் மற்றும் பாதுகாப்பான வழிகளை அறிந்துகொள்ளுதல்.
மேலும், இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் (INCOIS), சுனாமி, கடல் சீற்றம், மற்றும் கடல் வெப்ப அலைகள் குறித்த முன்னெச்சரிக்கைகளை வழங்கி வருகிறது.






