--- --:--:-- --

மெரினா கடற்கரையில் திருக்குறள் இசை சங்கமம்..!

9

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் ‘திருக்குறள் வாரம்’ கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மெரினா கடற்கரையில் வரும் ஜனவரி 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

 

கடந்த 2024 டிசம்பர் 31-ல் கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்வின் போது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ‘திருக்குறள் வாரம்’ கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் குறளாசிரியர் மாநாடு, திருக்குறள் போட்டிகள், நாட்டிய நாடகம் மற்றும் பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

 

அந்த வகையில், திருக்குறள் வாரத்தினை முன்னிட்டு, திருக்குறள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் வரும் 18-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் “திருக்குறள் வாரம்” கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த ஆண்டு 31.12.2024 அன்று குமரிமுனை வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்வின்போது அறிவித்திருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் திருக்குறள் குறளாசிரியர் மாநாடு, அரசு அலுவலர்களுக்கான போட்டிகள், பொதுமக்களுக்கான திருக்குறள் போட்டிகள், கல்லூரி மாணவ, மாணவியருக்கான கலை மற்றும் இலக்கியப் போட்டிகள், திருக்குறள் நாட்டிய நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

அதன் ஒரு பகுதியாக, சென்னை மெரினா கடற்கரையில் திருக்குறள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி 18.01.2026 அன்று மாலை நடத்தப்படவுள்ளது. இதில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பெரும் முயற்சியால் கடந்த பல ஆண்டுகளாக திட்டமிட்டு இசையமைக்கப்பட்ட திருக்குறளும், தமிழ் இலக்கிய பாடல்களும் இசை வடிவில் மக்கள் ரசிக்கும் வகையில் கொண்டாட்ட இசையாக மாலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

 

முன்னதாக, 18.01.2026 அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியும், 6 மணி முதல் 6.30 மணி வரை திரைப்பட நடிகை சுஹாசினியின் ‘என் சென்னை’ நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த இசை நிகழ்ச்சியானது வரும் 18.01.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை மெரினா கடற்கரையில் எல்லோரும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon