--- --:--:-- --

விவசாயிகளுக்கு ரூ.111.96 கோடி நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்..!

6

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 1.39 லட்சம் ஏக்கர் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.111.96 கோடியை ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025-2026 ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவத்தில் பெய்த கனமழை மற்றும் டித்வா புயலின் காரணமாக 1.39 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டன.

 

இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 01.12.2025 அன்று ஆய்வு கூட்டம் நடத்தி பயிர் பாதிப்படைந்த மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை உடனடியாக கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நெல் உள்ளிட்ட இறவைப்பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ஹெக்டேருக்கு ரூ. 20,000 ஆகவும் வழங்க உத்தரவிட்டார்.

 

இந்த உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பயிர் பரப்பு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து கருத்துரு பெறப்பட்டது. டித்வா புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.111.96 கோடி நிவராணத்தொகை ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின்பேரில் அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

இயற்கை பேரிடர்களால் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயிகளின் துயர் துடைக்க உரிய நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.

 

தற்போது ஒப்பளிக்கப்பட்ட நிவாரணத் தொகையான ரூ.111.96 கோடி அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon