சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் இறந்த வங்கதேச மாணவர்..!
வங்க தேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் தலைமையிலான எழுச்சியின் தலைவரான ஒஸ்மான் ஹாடி நேற்று உயிரிழந்தார். அவர் கொலை முயற்சியின் போது காயமடைந்து உயிரிழந்ததாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 12-ஆம் தேதி வங்க தேசத்தின் தலைநகர் டாக்காவின் பல்தான் நகர் பகுதியில் ஒஸ்மான் ஹாடி பேட்டரி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஒஸ்மான் ஹாடியை அருகில் இருந்தவர்கள் டாக்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பின்னர் ஒஸ்மான் ஹாடி வான்வழியாக சிறந்த மருத்துவ சிகிச்சைக்காக சிங்கபூர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவர்கள் முயற்சி செய்த நிலையில் ஒஸ்மான் ஹாடி நேற்று உயிரிழந்துள்ளார். இவரது உடலை டாக்காவிற்கு கொண்டும் செல்லும் முயற்சிகளை சிங்கப்பூர் அரசு மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஒஸ்மான் ஹாடி, ஷேக் ஹசினாவுக்கு எதிரான ’இன்குலாப் மஞ்ச்’ அமைப்பின் உறுப்பினராக இருந்துள்ளார். மேலும், பிப்ரவரி மாதம் வரவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளரான ஹாடி டாக்கா 8-வது தொகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற கிளர்ச்சியின் போது ’இன்குலாப் மஞ்ச்’ அமைப்பு முக்கியத்துவம் பெற்றது. அந்த கிளர்ச்சியே இறுதியில் ஷேக் ஹசினாவின் பதவிநீக்கத்திற்கு வழிவகுத்தது.
தீவிரவாத அமைப்பாக குற்றம்சாட்டப்பட்ட இந்த குழு, அவாமி லீகை கலைக்கும் முயற்சிகளில் முன்னணியில் செயல்பட்டு வந்தது. மாணவர் கிளர்ச்சியில் பங்கேற்றிருந்த போதிலும், யூனுஸ் அரசு இந்த கட்சியை கலைத்ததுடன் தேசியத் தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்துள்ளது. மாணவர் தலைவரின் படுகொலை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று வங்கதேச இடைக்கால தலைவர் முகம்மது யூனுஸ் உறுதியளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




