தேர்தல் ஆணையம் கடிதம் குறித்து ஜி.கே. மணி பரபரப்பு பேட்டி..!
பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ ஜி.கே. மணி, “பாமகவின் நிரந்தரமான தலைமை அலுவலகம் என்பது தேனாம்பேட்டை முகவரியில் இருப்பது. ஆனால், நிரந்தர முகவரியை சூழ்ச்சி செய்து கபட நாடகம் நடத்தி மாற்றப்பட்டுள்ளது. இது மாற்றப்பட்டதே மோசடியான செயல்” எனத் தெரிவித்துள்ளார். பாமகவின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்து தற்போது இருவரும் தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர்.
இதில் அன்புமணி, பாமகவின் தலைமை அலுவலகமாக சென்னை தி.நகர் அலுவலகம் செயல்படும் என அறிவித்து செயல்பட்டு வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 9ஆம் தேதி பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ‘பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா’ ஆகியோர் மேலும் ஓராண்டுக்கு பதவியில் நீடிப்பார்கள் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதம் என தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பினார்.
பாமக நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கூட்டத்தையும் கூட்டுவதற்கு அன்புமணிக்கு உரிமை இல்லை என்றும், அவர் சாதாரண செயல் தலைவர் தான் என்றும் ராமதாஸ் தரப்பில் முறையிடப்பட்டிருந்தது.
இதனால், பாமகவில் கடும் குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணியின் ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு, அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும், அவர் தான் கட்சியின் தலைவர் என்றும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டதாக, தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை காட்டினார்.
இந்த விவகாரம் நேற்று முதல் பாமகவில் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரத்தில் ராமதாஸ் தரப்பு பாமக எம்.எல்.ஏ. ஜி.கே. மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தேர்தல் ஆணையத்தின் கடிதத்தைக் காட்டி மக்களை நம்பவைக்கும் செய்தியாகவும், அரசியலில் திசை திருப்பும் செயலாகவும் நேற்று (15ஆம் தேதி) ஒரு செயல் நடைபெற்றது. அந்தச் செயலை திட்டமிட்டு செய்த மோசடி என்றும்கூட சொல்லலாம்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கி அறிவித்துள்ளது. அந்தக் கடிதத்தில் பாமகவின் தலைவர் என மட்டும் குறிப்பிட்டு, தலைமை அலுவலக முகவரியாக தி.நகர் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாமகவின் நிரந்தரமான தலைமை அலுவலகம் என்பது தேனாம்பேட்டை முகவரியில் இருப்பது. ஆனால், நிரந்தர முகவரியை சூழ்ச்சி செய்து கபட நாடகம் நடத்தி மாற்றப்பட்டுள்ளது. இது மாற்றப்பட்டதே மோசடியான செயல். தற்போது முகவரி மாற்றப்பட்டிருப்பது கட்சியின் நிறுவனரும், தலைவருமான ராமதாஸ் மற்றும் பாமக தொண்டர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது. அதேபோல், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாமல்லபுரம் பொதுக்கூட்டத்தில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை பதிவு செய்துகொண்டதாக தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.
25.08.2022 அன்று பாமகவின் தலைவராக அன்புமணி பொறுப்பேற்கிறார். அவரின் பதவிக்காலம் 25.08.2025 அன்றோடு முடிவடைந்துவிட்டது. அதன்படி தலைவர் பதவியிலேயே இல்லாதவர் மாமல்லபுரத்தில் பொதுக்கூட்டத்தை கூட்ட முடியும். இதுமட்டுமின்றி பாமகவின் சட்டவிதியில் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் ஒப்புதல் இல்லாமல், நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு என எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது. எனவே இங்கேயும் விதி மீறப்பட்டுள்ளது.
29.05.2025 அன்று பாமகவின் நிர்வாகக் குழு கூடி பாமகவின் நிறுவனர் ராமதாஸை கட்சியின் தலைவராக தேர்வு செய்தது. இதன் மூலம் அன்றிலிருந்து பாமக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அதனைத் தொடர்ந்து 8.7.2025 அன்று செயற்குழு கூடி, நிர்வாகக் குழு எடுத்த முடிவை அங்கீகரித்துவிட்டது. அதன்பின் 19.8.2025 அன்று பாமகவின் பொதுக் குழு முழு மனதோடு கட்சியின் தலைவராக ராமதாஸை ஏற்றுக்கொண்டது” என விளக்கம் கொடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




