டீசலுடன் எத்தனால் கலக்கும் திட்டம் தோல்வி – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

டீசலுடன் எத்தனாலைக் கலக்கும் திட்டம் தோல்வியடைந்ததால், ஐசோபியூடனாலை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 2014-ல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் வெறும் 1.5% உடன் தொடங்கியது. பின்னர், 2022 ஜூன் மாதத்தில் பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது.

 

தற்போது பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது. அதாவது, ஒரு லிட்டர் எரிபொருளில் 800 மில்லி லிட்டர் பெட்ரோல் 200 மில்லி லிட்டர் எத்தனால் கலந்து விற்கப்படுகிறது. இதனால் வாகன மைலேஜ் குறைந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், உயிரி எரிசக்தி மாநாட்டில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பிற்கு எதிராக பரவி வரும் கருத்துகள், தனக்கு எதிராக பணம் கொடுத்து திட்டமிட்டு நடக்கும் பரப்புரை என விமர்சித்தார்.

மேலும், டீசலுடன் எத்தனாலைக் கலக்கும் திட்டம் தோல்வியடைந்ததாகவும் அதனால், தற்போது டீசலுடன் ஐசோபியூடனாலை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2024-25 நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த டீசல் நுகர்வு 2% அதிகரித்து 9 கோடியே 10 லட்சம் டன்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.