பொதுத்துறை வங்கிகளில் 10,277 காலிப்பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்..!
நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10,277 கிளர்க் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி.ஐ. தவிர்த்து நாட்டில் உள்ள 11 பொதுத்துறை வங்கிகளில் நிலவும் காலிப்பணியிடங்களை ஐ.பி.பி.எஸ் எனப்படும் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 10,277 கிளர்க் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இதில், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 894 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் முடித்தவர்கள் இப்பணிக்கு இன்று முதல் வரும் 21ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும் இத்தேர்வில், ஆங்கிலப்பாடத்தைத் தவிர மற்ற பாட வினாக்களுக்கு தமிழில் பதில் எழுத முடியும்.
இப்பணிக்கான முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் மாதமும், அதில் தகுதி பெறுபவர்களுக்கு நவம்பர் மாதமும் முதன்மைத் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நாடு முழுவதும் 6,128 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியான நிலையில், நடப்பாண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





