நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணை..!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.கார்த்திகை தீபத்தன்று, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வழக்கத்திற்கு மாறான இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, தங்களை தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை என்றும், காவல் துறை உரிய பாதுகாப்பு வழங்க தவறி விட்டதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், பக்தர்கள் கைது செய்யப்பட்டதாகவும், கோயில் மலை அடிவாரத்தில் நுழைவதற்கு அனுமதிக்கவில்லை எனவும் மனுதாரர் தரப்பினர் வாதிட்டனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால், வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 3ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற பாதுகாப்பு வழங்க விடாமல் யார் தடுத்தார்கள் என்று CISF கமாண்டன்ட் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒத்திவைத்தார். இந்நிலையில், இவ்வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.





